நீர்ப்பிடிப்பில் மழையின்றி வரத்து இல்லை வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு

*5 மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கும் அபாயம்

ஆண்டிபட்டி : நீர்வரத்து இல்லாததால் வைகை அணையின் நீர்மட்டம் 48 அடியாக சரிந்து வருகிறது.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வைகை அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பிரதானமாக விளங்கி வருகிறது. அணைக்கு நீர்ப்பிடிப்பு பகுதியான வருசநாடு, வெள்ளிமலை, மூல வைகை ஆறு உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழை காரணமாகவும், பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் காரணமாகவும் நீர்வரத்து இருக்கும்.

கடந்த சில மாதமாக வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாத காரணத்தால் அணைக்கு நீர்வரத்து அடியோடு குறைந்தது. அதிலிலும் கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்து இல்லை. பெரியாறு அணையில் இருந்தும் குறைவான அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் நீர்வரத்து இல்லை. கடந்த கோடை காலத்தில் வெயில் அதிகரித்து காணப்பட்டது இதனால் அணையில் இருந்து நீர் ஆவியாகி குறைய தொடங்கியது.

இதனால் வைகை அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து கொண்டே வந்தது. வைகை அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் ஜூன் முதல் வாரத்தில் முதல்போக பாசனத்திற்கும், அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் 2ம் போக பாசனத்திற்கும் தண்ணீர் திறப்பது வழக்கம்.

இதன்மூலம் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். கடந்த 3 ஆண்டுகளில் வைகை அணையில் போதுமான நீர் இருப்பு இருந்த காரணத்தால் ஜூன் 2ம் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டது.

ஆனால் இந்த ஆண்டு தொடக்கம் முதல் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. மேலும் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் தற்போது 48.45 அடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. தென்மேற்கு பருவமழை இன்று வரை பெய்து கை கொடுக்காததால்‌ இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரத்தில் முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படவில்லை.
இந்நிலையில் வைகை அணையை நம்பியுள்ள 5 மாவட்டங்களில் விவசாயம் கேள்விக்குறியாகி உள்ளது.

The post நீர்ப்பிடிப்பில் மழையின்றி வரத்து இல்லை வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு appeared first on Dinakaran.

Related Stories: