கம்பங்களை அகற்றாமல் சாலை விரிவாக்கப்பணி இடிந்து விழும் நிலையில் மின் கம்பங்கள்: விபத்துக்கு முன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஸ்ரீபெரும்புதூர்: மணிமங்கலத்தில் சாலை விரிவாக்கப்பணிகள் மின் கம்பங்களை அகற்றாமல் நடந்து வருகிறது. இடிந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பங்களை அகற்றிவிட்டு விரிவாக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்னர். சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலை, சென்னை-திருச்சி ஜிஎஸ்டி சாலையை இணைக்கும் சாலையாக ஸ்ரீபெரும்புதூர்-தாம்பரம் சாலை உள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் இருந்து கட்சிப்பட்டு, பிள்ளைப்பாக்கம், நாவலூர், கொளத்தூர், மலைப்பட்டு, சேத்துப்பட்டு, புஷ்பகிரி, மணிமங்கலம், முடிச்சூர், பெருங்களத்தூர் வழியாக தாம்பரம் ஜிஎஸ்டி சாலையை இணைக்கிறது.

இந்த பகுதிகளை சார்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தினமும் சென்று வருகின்றனர். தற்போது, தாம்பரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை மாநகர பேருந்து தடம் எண் 583சி, 583டி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சாலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதனால், வாகன நெரிசலும், அடிக்கடி விபத்தும் நடப்பதால் இரு வழிச்சாலையான இந்த சாலையை 4 வழி சாலையாக அகலபடுத்த நெடுஞ்சாலை துறை சார்பில் திட்டமிடபட்டது.

முதல் கட்டமாக ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பிள்ளைபாக்கம் வரை 3.5 கிலோமீட்டர் சாலையை 4 வழி சாலையாக 3 ஆண்டுகளுக்கு முன்பு அகலப்படுத்தபட்டது. தற்போது, 2ம் கட்டமாக பிள்ளைப்பாக்கம் முதல் மணிமங்கலம் வரை 8.4 கிலோமீட்டர் நீளத்திற்கு அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மணிமங்கலம் பாரதி நகர் அருகே சாலை விரிவாக்கம் செய்யும் பணிக்கு இடையூறாக சாலையில் நடுவே 2 மின்கம்பங்கள் உள்ளன.

இதனை அகற்றாமல் சாலை அமைக்கபட்டு வருகிறது. மேலும், அதேபகுதியில் 2 மின் கம்பங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் செல்கின்றனர். எனவே, சாலை விரிவாக்க பணிக்கு இடையூறாக உள்ள மின்கம்பம் மற்றும் இடிந்து விழும் நிலையில் உள்ள கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

The post கம்பங்களை அகற்றாமல் சாலை விரிவாக்கப்பணி இடிந்து விழும் நிலையில் மின் கம்பங்கள்: விபத்துக்கு முன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: