கமுதி அருகே சக்தி மாரியம்மன் கோயில் ஆடி பொங்கல் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்

 

கமுதி, ஆக. 7: கமுதி அருகே கருங்குளம் சக்தி மாரியம்மன் கோயில் ஆடி பொங்கல் திருவிழா கடந்த 28ம் தேதி காப்பு கட்டுடன் துவங்கி நடைபெற்று வந்தது. இதையொட்டி, தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. திருவிழாவினை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காப்புகட்டி விரதமிருந்து வந்தனர். இவர்களில் பலரும் கோயில் முன்பாக பொங்கல் வைத்தல், அக்னி சட்டி எடுத்தல், உடல் முழுவதும் சேறு பூசி சேத்தாண்டி வேஷம் போடும் நேர்த்திக்கடன் செலுத்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை அம்மனின் அருள் வேண்டி நிறைவேற்றினர்.

இந்நிலையில் திருவிழாவின் கடைசி நாளான நேற்று திரளான பெண்கள் பங்கேற்ற முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் நாகரத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில், ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் அய்யனார், கிராம செயலாளர் செல்லச்சாமி, பொருளாளர் ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் விரதம் இருந்து வளர்க்கப்பட்ட முளைப்பாரியை கோயில் முன்பு வைத்து பெண்கள் கும்மியடித்து வழிபட்டனர். பின்னர் மேளதாளம் முழங்க, வாண வேடிக்கையுடன், முளைப்பாரிகளை பெண்கள் தலையில் சுமந்துகொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு சென்று ஆற்றில் கரைத்தனர். திருவிழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

The post கமுதி அருகே சக்தி மாரியம்மன் கோயில் ஆடி பொங்கல் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் appeared first on Dinakaran.

Related Stories: