ஸ்ரீரங்கம் கோயில் கோபுரத்தின் 20 அடி சிலாப் இடிந்து விழுந்தது: அசம்பாவிதம் தவிர்ப்பு

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கிழக்கு 2வது கோபுரத்தில் இருந்த சிலாப் நேற்று அதிகாலை இடிந்து விழுந்தது. பக்தர்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மொத்தம் 21 கோபுரங்கள் உள்ளன. கோயில் நுழைவு பகுதியில் உள்ள ராஜகோபுரம் ஆசியாவிலேயே உயரமானது. இது 13 நிலைகளுடன், 13 கலசங்களுடன் 236 அடி உயரம் கொண்டது.

கிழக்கு வாசலில் வெள்ளை கோபுரத்தை தவிர 3 கோபுரங்கள் உள்ளது. இதில் சித்திரை வீதியையும், கீழஅடையவளஞ்சான் வீதியையும் இணைக்கும் வகையில் உள்ள தாமோதர கிருஷ்ணன் நுழைவாயில் கோபுரத்தில் முதல் நிலையில் ஒரு சிலாப் (குடுவை), 2ம் நிலையில் ஒரு சிலாப் இருக்கிறது. முதல் நிலையில் உள்ள சிலாப் 20 அடி நீளம், 2 அடி உயரம் கொண்டது. இந்த சிலாப் மற்றும் சாமி சுதைகள் சேதமடைந்திருந்ததால் கட்டைகள் மூலம் முட்டு கொடுத்து வைத்திருந்தனர். இதனால் மேல்பகுதிக்கு செல்லும் படிக்கட்டு கம்பி வேலி கொண்டு அடைக்கப்பட்டது. இதை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 1.50 மணியளவில் சேதமடைந்திருந்த முதல் நிலை சிலாப் முழுவதும் இடிந்து விழுந்தது. அருகேயுள்ள மின்கம்பிகள் மீது இடிபாடுகள் விழுந்ததில் ஒரு மின் கம்பம், ஒரு கேபிள் கம்பம் சாய்ந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் வந்து மின் கம்பத்தை சரி செய்தனர். அதிகாலை 3.30 மணிக்கு மின் விநியோகம் சீரானது. தொடர்ந்து அந்த வழியே பக்தர்கள் செல்லாதபடி தடுப்புகள் வைக்கப்பட்டது. சிலாப் விழுந்த இடத்தில் பகல் நேரத்தில் பக்தர்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். அதிகாலையில் விழுந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

கோபுரத்தின் சிலாப் இடிந்து விழுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து நேரில் வந்து பார்வையிட்ட ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் சிவராம் குமார் கூறுகையில், இடிந்து விழுந்த சிலாப்பை மீண்டும் சீரமைக்கவும், சேதமடைந்துள்ள சுதைகளை பாதுகாக்கவும் ரூ.98 லட்சத்தில் திட்ட அறிக்கை தயாரித்து அறநிலைய துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறை அனுமதி கிடைத்ததும் பணிகள் துவங்கும் என்றார். கோபுர சிலாப்பை உடனடியாக சரி செய்யும்படி திருச்சி மாவட்ட இந்து முன்னணி சார்பில் இணை ஆணையர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

2 ஆண்டுக்கு முன்பே சேதம்
இடிந்து விழுந்த சிலாப் 2 ஆண்டுக்கு முன்பே சேதமடைந்திருந்தது. அப்போது இருந்த அறங்காவலர் குழுவினர் சொந்த செலவில் அதை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் ஏனோ அப்பணி கடந்த 6 மாதங்களுக்கு முன் நிறுத்தப்பட்டது.

வெடிகள் காரணமா?
கோயில் கோபுரங்கள் மற்றும் கோயிலை சுற்றி அதிகளவில் குரங்குகள் நடமாடுவதால் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து சிலாப் உடைந்திருக்கலாம் என்றும் ஸ்ரீரங்கம் கீழஅடையவளஞ்சான் வீதியில் உள்ள முனீஸ்வரன் கோயிலில் திருவிழாவை முன்னிட்டு அதிக அதிர்வு உள்ள வெடிகளை வெடித்ததால் சிலாப் விழுந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

The post ஸ்ரீரங்கம் கோயில் கோபுரத்தின் 20 அடி சிலாப் இடிந்து விழுந்தது: அசம்பாவிதம் தவிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: