தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழாவில் இறை அழைத்தலுக்காக திருப்பலி

தூத்துக்குடி, ஆக. 2:தூத்துக்குடியில் உள்ள உலக பிரசித்திப் பெற்ற திவ்ய சந்தமரிய தஸ்நேவிஸ் மாதா எனப்படும் பனிமய மாதா பேராலயத்தின் 441வது ஆண்டு திருவிழா, கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கத்தோலிக்க மறைமாவட்ட நூற்றாண்டை முன்னிட்டு 16வது தங்க தேர் பவனி இந்தாண்டு நடக்கிறது. வரும் 5ம் தேதி காலை 7 மணிக்கு பனிமய அன்னையின் தங்கத்தேர் முக்கிய வீதிகளில் வலம் வருகிறது. திருவிழா நாட்களில் தினமும் சிறப்பு திருப்பலிகள், செபமாலை, நற்கருணை ஆசீர் உள்ளிட்டவை நடந்து வருகிறது. நேற்று காலை 5 மணிக்கு முதல் திருப்பலி நடந்தது. காலை 5.45 மணி 2ம் திருப்பலி, காலை 6.30 மணிக்கு லயன்ஸ் டவுன் பங்கு இறைமக்களுக்கான திருப்பலி, காலை 7.30 மணிக்கு பனிமய அன்னை பேராலய பங்கு இறைமக்கள் கலந்து கொண்ட திருப்பலி நடைபெற்றது.

தொடர்ந்து 8.30 மணிக்கு டி.சவேரியார்புரம் பங்கு இறைமக்கள், எம்எம், எஸ்ஆர்ஏ அருட்சகோதரிகளுக்கான திருப்பலிகளும் நடந்தன. காலை 9.30 சமூக பணியாளர்களுக்கான திருப்பலி நடந்தது. இதில் பல்நோக்கு தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர். பகல் 11 மணிக்கு பொதுநிலையினருக்கான திருப்பலி நடந்தது. இதில் பொதுநிலையினர், பெண்கள், அன்பியங்கள், குடும்பங்கள்(பொதுநிலையினர் பணியகத்தினர்) கலந்து கொண்டனர்.

மாலை 5.30 மணிக்கு சிறுமலர், கப்புசின் குருமடங்கள் சார்பில் இறை அழைத்தலுக்காக திருப்பலி நடந்தது. இதனை திண்டுக்கல் ஆயர் பால்சாமி தலைமை வகித்து நடத்தி வைத்தார். இரவு 7.15 மணிக்கு செபமாலை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடந்தது. பின்னர் பாளை மறைமாவட்ட அருட்தந்தை ஜேமிக்ஸ், அன்னை மரியா கொண்டாட்டத்தின் தாய் என்ற தலைப்பில் மறையுரை நிகழ்த்தினார். திருப்பலி மற்றும் நிகழ்ச்சியில் ஆயர் தாமஸ் பால்சாமி, பங்குதந்தையர்கள் குமார்ராஜா, பன்னீர்செல்வம், சைமன், தெனிஸ், ஜேம்ஸ்விக்டர், பெனோ, பவுல், ராபர்ட், சகாயம், வளன்,அகஸ்ட்டின், பெலிக்ஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

The post தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழாவில் இறை அழைத்தலுக்காக திருப்பலி appeared first on Dinakaran.

Related Stories: