மாநகராட்சி வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்வு

 

கோவை, ஜூலை 28: தமிழக மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கோவை மாநகராட்சி வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களுக்கான மறைமுகத் தேர்தல் நேற்று காலை 9.30 மணிக்கு மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹால் மாமன்றக் கூடத்தில் மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும் கமிஷனருமான மு.பிரதாப் தலைமையில் நடைபெற்றது. இம்மறைமுகத்தேர்தலில் வார்டு எண்.7, 9, 17, 38, 39, 43, 44, 47, 48, 56, 74, 75, 78, 85, 86, 90, 91, 95, 96, 97, 98 மற்றும் 99 ஆகிய 22 கவுன்சிலர்களை தவிர 78 கவுன்சிலர்கள் வந்தனர்.

வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் பதவிக்கு 1 வது வார்டு கவுன்சிலர் கற்பகம், 37வது வார்டு குமுதம், 69வது வார்டு சரவணக்குமார், 41வது வார்டு சாந்தி, 83வது வார்டு சுமா, 58வது வார்டு சுமித்ரா, 55வது வார்டு தர்மராஜ், 45 வது வார்டு பேபி சுதா, 6 வது வார்டு பொன்னுசாமி, 76 வது வார்டு ராஜ்குமார் ஆகிய 10 உறுப்பினர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இதனிடையே வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்ட 10 வேட்பாளர்களில் 9 வேட்பாளர்கள் அதிக வாக்குகள் பெற்று வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களாக வெற்றி பெற்றனர்.

55வது வார்டு தர்மராஜ் மட்டும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் வழங்கினார். இந்நிகழ்வின்போது மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிசெல்வன், மண்டல குழு தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post மாநகராட்சி வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: