மணிப்பூர் நிர்வாண ஊர்வலம் சிபிஐ விசாரிக்க உத்தரவு: அசாம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை: ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

இம்பால்: மணிப்பூரில் பழங்குடியின பெண்களை நிர்வாண ஊர்வலம் நடத்தியது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தும் என்று ஒன்றிய அரசு அறிவித்து உள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மே மாதம் 3ம் தேதி இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இதனால் அங்கு வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. 3 மாதங்களாகும் நிலையிலும் அங்கு நிலைமை சீராக வில்லை. போலீசார் மற்றும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் அங்கு நாள்தோறும் தீ வைப்பு, துப்பாக்கி சூடு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. மணிப்பூரின் பவ்பேக்சாவ் இகாய் பகுதியில் இரு கும்பலிடையே நேற்று மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இருதரப்பினரும் ஒருவரையொருவர் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். துப்பாக்கி சூட்டில் அந்த பகுதியில் இருந்த வீடு ஒன்றில் தீப்பற்றியது. இதில் உயிர்சேதம் ஏற்பட்டதா என்ற உடனடி தகவல்கள் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் மணிப்பூரில் பழங்குடியின பெண்களை நிர்வாண ஊர்வலம் நடத்தியது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. மேலும் இது தொடர்பான வழக்கு பக்கத்து மாநிலமான அசாமில் நடக்கும் என்றும், மெய்தி மற்றும் குக்கி இன மக்களுடன் தொடர்ந்து உள்துறை அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குக்கி இன மக்களுக்கு தனி நிர்வாகம் தேவை என்று வலியுறுத்தி குக்கி இனத்தை சேர்ந்தவர்கள் நேற்று காங்போங்க்பீ மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழங்குடியினர் ஒற்றுமை சதார் ஹில்ஸ் என்ற அமைப்பின் கீழ் காம்பிப்ஹய் பகுதியில் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மணிப்பூரில் வன்முறை பற்றி எரிந்து வருவது குறித்து விவாதிக்கும் வகையில் சட்டமன்ற அவசரகால கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 5 பேர் வலியுறுத்தி இருக்கின்றனர். இது தொடர்பாக ஆளுநர் அனுசியா உக்கிக்கு அவர்கள் கடிதம் எழுதி இருக்கிறார்கள்.

The post மணிப்பூர் நிர்வாண ஊர்வலம் சிபிஐ விசாரிக்க உத்தரவு: அசாம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை: ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: