சேலம் அரசு அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டி ‘கலாட்டா’ டெண்டரை பிடிக்க பாமக எம்எல்ஏவின் புது டெக்னிக்: ‘பி.பி அதிகமானதுனால இப்படி பண்ணிட்டாரு…’ என சக எம்எல்ஏ வக்காலத்து

சேலம்: சேலத்தில் வெளியிடப்படும் டெண்டரை பிடிக்க பாமக எம்எல்ஏவின் நோட்டீஸ் கலாட்டாவால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள மாவட்ட பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு மேட்டூர் பாமக எம்எல்ஏ சதாசிவம் நேற்று காலை சென்று கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர் இருவரும் எங்கே என கேட்டார். அங்கிருந்தவர்கள் அவர்கள் ஆய்வுக்காக சென்றுள்ளனர் என்றனர். அப்போது எம்எல்ஏ சதாசிவம் ‘ஏதோ நாளைக்கு டெண்டர் வருதாமே. மூன்று நாட்களாக அவர்களை பார்க்க அலுவலகம் வருகிறேன். ஆனால் ஆய்வுக்கு சென்றுள்ளதாக கூறுகிறீர்களே? என கேள்வி எழுப்பினார்.

பின்னர், நீண்ட நேரமாக அந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டும், செல்போனை எடுக்காததால் கோபமடைந்த சதாசிவம் எம்எல்ஏ தனது பெயர் கொண்ட லட்டர்பேடில் அதிகாரிகளை கண்டித்து அலுவலக வளாகத்தில் நோட்டீஸ் ஒன்றை ஒட்டினார். அதில், ‘கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர் இருவரும் கடந்த 3 நாட்களாக அலுவலகம் வராமல் சொந்த வேலை சம்பந்தமாக அரசு காரை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர். அவர்கள் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது. சிறிது நேரத்தில் கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் வந்தார். அவர் சதாசிவம் எம்எல்ஏவின் கையை பிடித்து அலுவலகத்துக்குள் அழைத்துச் சென்றுள்ளார். சிறிது நேரத்திலேயே சேலம் மேற்கு பாமக எம்எல்ஏ அருள் அங்கு வந்து, சதாசிவம் ஒட்டிய நோட்டீசை கிழித்து எறிந்தார்.

இதுபற்றி அருள் எம்எல்ஏ கூறுகையில், ‘சதாசிவம் எம்எல்ஏ டெண்டர் கேட்க வரவில்லை. அவரது தொகுதியில் பள்ளிக்கட்டிடம் கட்டுவது தொடர்பாக வந்துள்ளார். அவருக்கு பி.பி (ரத்தஅழுத்தம்)அதிகம். இதனால் இச்சம்பவம் நடந்துவிட்டது’ என்றார். சதாசிவம் எம்எல்ஏ கூறுகையில், ‘மேட்டூர் தொகுதியில் பள்ளிக்கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி கேட்டேன். இது தொடர்பாக அதிகாரிகளை சந்திக்க வந்தும் பார்க்க முடியவில்லை. சரியான பதில் இல்லை. இந்த கோபத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்துவிட்டது. தற்போது பள்ளிக்கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்’ என்றார்.

The post சேலம் அரசு அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டி ‘கலாட்டா’ டெண்டரை பிடிக்க பாமக எம்எல்ஏவின் புது டெக்னிக்: ‘பி.பி அதிகமானதுனால இப்படி பண்ணிட்டாரு…’ என சக எம்எல்ஏ வக்காலத்து appeared first on Dinakaran.

Related Stories: