சென்னை – புதுச்சேரி 4 வழிச்சாலை திட்டத்தில் பூஞ்சேரி கூட்ரோடு உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் தீவிரம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கூட்ரோட்டில் உயர் மட்ட மேம்பாலம் கட்டும் பணியில் ஊழியர்கள் இரவு பகலாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பணிகளை, விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளூர் மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், புதுச்சேரி மற்றும் தென் மாவட்டங்களுக்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல், புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகம் சார்பிலும் சென்னைக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இச்சாலை, எப்போதுமே போக்குவரத்து நிறைந்து பரபரப்பாக காணப்படும்.

மேலும், இந்த சாலையின் முக்கியத்துவத்தை கருதி, தேசிய நெடுஞ்சாலையாக மாற்றி, மாமல்லபுரம் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரியில் இருந்து புதுச்சேரி வரை 90 கிமீ தூரம் வரை 4 வழிச்சாலையாக விரிவுபடுத்த கடந்த 2021ம் ஆண்டு ஒன்றிய அரசு முடிவெடுத்தது. இதையடுத்து, 4 வழிச்சாலை பணிக்காக ரூ.1,270 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது. சென்னையில் இருந்து புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு, ஒருவழி சாலையாக இருந்தது. இந்த குறுகிய சாலையில் தான் வாகனங்கள் சென்று வந்தது. இதனால், எதிர் எதிரே வரும் வாகனங்கள் ஒதுங்குவதற்கு கூட இடமில்லாத காரணத்தால் வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி அடிக்கடி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்துகளால் பலர் கை, கால்களை இழந்தனர். ஒரு சிலர் தலை மற்றும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த, விபத்துகளை தடுக்கும் வகையில், கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை அப்போது தமிழகத்தின் முதல்வராக இருந்த கருணாநிதி, தனது நேரடி பார்வையில், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இடம் பெற்ற, ஒரு குழுவை அமைத்து கிழக்கு கடற்கரை சாலையை விரிவுடுத்த உடனடியாக ஆய்வு செய்து தனக்கு அறிக்கை சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதனைதொடர்ந்து, அதிகாரிகள் சென்னை முதல் புதுச்சேரி வரை ஆய்வு செய்து சாலையை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது என அறிக்கை சமர்பித்தனர்.

இதையடுத்து, கடந்த 1998ம் ஆண்டு இந்த கிழக்கு கடற்கரை சாலையை கருணாநிதி தலைமையிலான அரசு இரு வழிச்சாலையாக விரிவுபடுத்தியது. இந்த, சாலையை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் பராமரித்து, கடந்த 2002ம் ஆண்டு முதல் முதல் சுங்கவரிச் சாலையாக பயன்படுத்தி வந்தது. மேலும், இச்சாலை வழியாக புதுச்சேரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும், உலக புகழ் பெற்ற மாமல்லபுரம் நகருக்கும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் படையெடுப்பதால் கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அடிக்கடி விபத்து ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி, விபத்துகளை குறைக்கும் வகையில், கடந்த 2018ம் ஆண்டு சென்னை அக்கரையில் இருந்து மாமல்லபுரம் வரை 30 கிமீ தூரம் 4 வழிச் சாலையாக மேம்படுத்தப்பட்டது.

இந்த சாலையை கடந்த 2021ம் ஆண்டு வரை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் பராமரித்து வந்த நிலையில், கடந்தாண்டு ஒன்றிய சாலை மேம்பாட்டு நிறுவனம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இந்நிலையில், மாமல்லபுரம் முதல் புதுச்சேரி வரை 4 வழிச்சாலையாக விரிவுபடுத்தி விபத்துகளை குறைக்கும் வகையிலும், வாகனங்கள் விரைவாக சென்று சேரும் வகையில் ஒன்றிய அரசு பல்வேறு துறை அதிகாரிகளை ஒன்றிணைத்து ஒரு ஆய்வு கூட்டத்தை நடத்தி ரூ.1,270 கோடியை ஒதுக்கி அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணையில் முதல் கட்டமாக மாமல்லபுரம் – முகையூர் இடையே 30 கிமீ தூரம், 2வது கட்டமாக முகையூர் – மரக்காணம் வரை 30 கிமீ தூரம், 3வது கட்டமாக மரக்காணம் – புதுச்சேரி வரை 30 கிமீ தூரம் என மொத்தம் 90 கிமீ தூரம் வரை 4 வழி சாலையாக விரிவுபடுத்தும் பணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

இதில், மாமல்லபுரம் இசிஆர் நுழைவு பகுதியில் ஒரு மேம்பாலம், பூஞ்சேரி சந்திப்பில் ஒரு உயர் மட்ட மேம்பாலம், மரக்காணம் அடுத்த கூணிமேடு பகுதியில் ஒரு மேம்பாலம் என 3 பெரிய மேம்பாலங்களும், மாமல்லபுரம் அடுத்த மணமை, குன்னத்தூர், வெங்கப்பாக்கம், விட்டிலாபுரம், முதலியார்குப்பம், சீக்கினாங்குப்பம், ஓதியூர் எல்லையம்மன் கோயில், விளம்பூர், கடப்பாக்கம், மரக்காணம், கூனிமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 38 சிறிய பாலங்களும் அமைகிறது. மேலும், கூவத்தூர் அடுத்த வடபட்டினம், மரக்காணம் அடுத்த தேன்பாக்கம், கூனிமேடு உள்ளிட்ட இடங்களில் தலா ஒரு சுங்கச்சாவடி என 3 சுங்கச்சாவடிகள் அமைய உள்ளது.

இந்நிலையில், கடந்தாண்டு முதல் மாமல்லபுரம் – புதுச்சேரி இடையே 4 வழிச்சாலை விரிவுபடுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. மேலும், மழை காரணமாக ஆங்காங்கே மழை நீர் நின்று சாலை பணி தடைபட்டது. தற்போது, மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கூட்ரோட்டில் ஓஎம்ஆர் சாலையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் வகையில் உயர் மட்ட மேம்பாலம் கட்டும் பணியில் தனியார் நிறுவன ஊழியர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சாலை பணியை விரைந்து முடித்து, பயன்பாட்டு கொண்டு வர வேண்டும் என உள்ளூர் மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில், ‘மாமல்லபுரம் முதல் புதுச்சேரி வரை இரு வழிச்சாலையை விரிவுபடுத்தி 4 வழி சாலை அமைக்க ஒன்றிய அரசு தேசிய நெடுஞ்சாலையாக மாற்றியது. இதில், மூன்று கட்டங்களாக பணிகள் மேற்கொள்ளபட உள்ளது. சாலையை விரிவுபடுத்த கட்டிடங்கள், கடைகள், வீடுகள் அகற்றப்பட்டு அதற்கு உண்டான பணத்தை உரிமையாளர்களுக்கு வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. ஒருசில இடங்களில் சாலை பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. குறிப்பாக, மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி சந்திப்பில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணியில் தனியார் நிறுவன வட மாநில தொழிலாளர்கள் இரவு பகல் பாராமல் வேலை செய்து வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் சாலை பணியை முடித்து, விரைவில் பயன்பாட்டுக் கொண்டு வர வேண்டும்’ என்றனர்.

The post சென்னை – புதுச்சேரி 4 வழிச்சாலை திட்டத்தில் பூஞ்சேரி கூட்ரோடு உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: