திருப்போரூர் அருகே தண்டு மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா: பக்தர்கள் பெருந்திரளாக பங்கேற்பு

 

திருப்போரூர்: திருப்போரூர் அருகே கண்ணகப்பட்டு கிராமத்தில் மிகப் பழமையான தண்டுமாரியம்மன்கோயில் உள்ளது. இக்கோயிலில் குடமுழுக்கு நடத்த கிராம மக்கள் முடிவு செய்து, கடந்த ஆண்டு பாலாலயம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இக்கோயிலில் பராமரிப்பு பணிகள், தூண்கள், முன்மண்டபம் ஆகியவை புனரமைக்கப்பட்டது. மேலும், கோயிலில் புதிய விமானம் அமைக்கப்பட்டு கோயில் வளாகம் முழுவதும் வண்ணம் பூசப்பட்டு, அனைத்து பணிகளும் நிறைவுபெற்றன. இதையடுத்து விழாக்குழு சார்பில், தண்டுமாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கடந்த 22ம் தேதி காலை கோ பூஜை, கணபதி பூஜை, நவகிரக யாகத்துடன் குடமுழுக்கு விழா நிகழ்ச்சிகள் துவங்கியது.நேற்று முன்தினம் மாலை யாகசாலை பூஜை, மகா தீபாராதனை நடத்தப்பட்டது. இதையடுத்து, நேற்று காலை 2வது கால யாக பூஜை, நாடி சந்தானம் ஆகியவை நடத்தப்பட்டது. பின்னர் காலை 8 மணியளவில் கடம் புறப்பாடு நடந்தது. இதைத் தொடர்ந்து மூலவர் விமான கலசத்துக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி, குடமுழுக்கு நடத்தினர்.

பின்னர் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, விழா குழு சார்பில் மகா தீபாராதனை நடத்தப்பட்டது. இதில் திருப்போரூர், கண்ணகப்பட்டு, காலவாக்கம், இள்ளலூர், செங்காடு உள்பட பல்வேறு கிராமப் பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர். குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கு விழாக்குழு சார்பில் பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. குடமுழுக்கு விழாவையொட்டி, போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

The post திருப்போரூர் அருகே தண்டு மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா: பக்தர்கள் பெருந்திரளாக பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: