காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டால் அதை மதிப்போம்: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேச்சு

பெங்களூரு: காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டால் அதை மதிப்போம் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். குறுவை சாகுபடிக்காக காவிரியில் உரிய நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தி, ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை, நேற்று டெல்லியில் அமைச்சர் துரைமுருகன் நேரில் வழங்கினார். கர்நாடகா உடனடியாக தண்ணீர் திறந்துவிட்டால் மட்டுமே தமிழகத்தில் குறுவைப் பயிரைக் காப்பாற்ற முடியும் என கடிதத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

கர்நாடக அரசு இதுவரை தமிழ்நாட்டிற்கு அளிக்கவேண்டிய காவிரி நீரை அளிக்காததால் தமிழகத்தில் நிலவும் நீர்ப் பற்றாக்குறை பற்றி எடுத்துரைத்தார். உடனடியாக நீரை திறந்து விடுவதற்கான ஏற்பாடுகளை செய்ய காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் அமைச்சர் துரைமுருகன் கேட்டு கொண்டார். இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டால் அதை மதிப்போம் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

தண்ணீர் திறந்துவிட ஆணையம் உத்தரவு பிறப்பித்தால் அதை மதிப்போம். கர்நாடக மாநில குடிநீர் தேவைக்கு போக மீதமுள்ள நீரை கட்டாயம் தமிழ்நாட்டுக்கு திறந்துவிடுவோம். கர்நாடக மாநிலத்திடம் போதுமான தண்ணீர் இல்லை. கடந்த சில ஆண்டுகளாக பருவமழை சீராக இருந்தது, ஆனால் இந்த வருடம் பருவமழை சீராக இல்லை. வறட்சி பாதிப்பு ஏற்பட்டால் நீர் பங்கீடு செய்துகொள்ளப்படும் என டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

The post காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டால் அதை மதிப்போம்: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: