கொடைக்கானல் எழுத்தறைக்காடுவில் பயிர்கள், வேலிகளை பந்தாடிய யானை கூட்டம்

*வனத்திற்குள் விரட்ட விவசாயிகள் கோரிக்கை

கொடைக்கானல் : கொடைக்கால் கீழ்மலை எழுத்தறைக்காடு மலைக்கிராம பகுதியில் புகுந்த காட்டு யானைகள் பயிர்கள், சோலார் மின்வேலிகளை சேதப்படுத்தியது. எனவே வனத்துறையினர் விரைந்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கொடைக்கானல் கீழ்மலை பகுதி, கிழக்கு செட்டியபட்டி அருகில் எழுத்தறைக்காடு மலை கிராமம் உள்ளது.

நேற்று முன்தினம் இரவு இப்பகுதிக்குள் புகுந்த யானை கூட்டம் அங்குள்ள விளைநிலங்களுக்குள் நுழைந்து வாழை, பீன்ஸ் பயிர்களை நாசப்படுத்தியது. மேலும் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டிருந்த சோலார் மின்வேலிகளையும் சேதப்படுத்தியது. தொடர்ந்து இப்பகுதியில் யானை கூட்டம் முகாமிட்டிருப்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமலும், விவசாயிகள் விளைநிலங்களுக்கு செல்ல முடியாமலும் அச்சமடைந்து வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘இப்பகுதியில் காட்டு யானைகள் சேதப்படுத்திய பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தொடர்ந்து யானை கூட்டம் இப்பகுதியில் முகாமிட்டிருப்பதால் விவசாய நிலங்கள் மேலும் சேதமடைய வாய்ப்புள்ளது. எனவே வனத்துறையினர் விரைந்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

The post கொடைக்கானல் எழுத்தறைக்காடுவில் பயிர்கள், வேலிகளை பந்தாடிய யானை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: