‘இந்தியா’ கூட்டணி குறித்து விமர்சனம் அசாம் முதல்வருக்கு காங். பதிலடி

புதுடெல்லி: ஆங்கிலேயர்கள் சூட்டிய பெயர் இந்தியா என எதிர்க்கட்சிகள் கூட்டணியை விமர்சித்த அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாவுக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது டிவிட்டரில், ‘‘நமது நாகரீக மோதல்கள் இந்தியாவையும், பாரதத்தையும் மையமாகக் கொண்டுள்ளன. ஆங்கிலேயர்கள் நம் நாட்டிற்கு இந்தியா என பெயர் சூட்டினர். காலனித்துவ மரபுகளிலிருந்து நம்மை விடுவிக்க நாம் பாடுபட வேண்டும். நமது முன்னோர்களைப் போல நாமும் தொடர்ந்து பாரதத்திற்காக பாடுபடுவோம்’’ என கூறியதோடு, டிவிட்டரில் இந்தியா என்ற நாட்டின் பெயருக்கு பதிலாக பாரதம் என மாற்றி இருந்தார்.

இதற்கு பதிலடி தந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ‘‘ஹிமந்தாவின் வழிகாட்டியான பிரதமர் மோடி திறன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா என திட்டங்களுக்கு பெயர் சூட்டுகிறார். மாநில முதல்வர்களை டீம் இந்தியாவாக ஒன்றாக செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறார். ஆனால் எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ என கூட்டணி தொடங்கியதும், இது காலனித்துவ மனநிலையை பிரதிபலிப்பதாக அவர் கூறுகிறார். இதை முதலில் அவர் தனது முதலாளியிடம் (பிரதமர் மோடி) தான் கூற வேண்டும்’’ என பதிலடி தந்துள்ளார். இதிலிருந்து பாஜவின் பிளவுபடுத்தும் போக்குள் முழுமையாக வெளிப்பட்டிருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

The post ‘இந்தியா’ கூட்டணி குறித்து விமர்சனம் அசாம் முதல்வருக்கு காங். பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: