குனோ தேசிய பூங்காவில் தொடர்ந்து அதிகரிக்கும் சிவிங்கிப்புலிகளின் உயிரிழப்பு.. பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம்

மத்திய பிரதேசம்: ஆப்பிரிக்காவில் இருந்து மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவிற்கு கொண்டுவரப்பட்ட சிவிங்கிப் புலிகள் அபாயத்தில் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள். இந்தியாவில் அழிந்துபோன இனமான சிவிங்கிப்புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் ஒன்றிய அரசின் லட்சியத் திட்டத்தின்கீழ், நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகளும், தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப் புலிகளும் கொண்டுவரப்பட்டு, குனோ தேசியப் பூங்காவில் விடப்பட்டன.

இதில், சாஷா எனும் பெண் சிவிங்கிப் புலி சிறுநீரகத் தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த மாா்ச் மாதம் உயிரிழந்தது. பின்னா், உதய் எனும் ஆண் சிவிங்கிப் புலி கடந்த ஏப்ரல் மாதமும், தக்ஷா என்ற பெண் சிவிங்கிப் புலி கடந்த மே மாதமும் இறந்தன. இதனிடையே, ஜ்வாலா என்ற பெண் சிவிங்கிப் புலி, குனோ பூங்காவில் ஈன்றிருந்த 4 குட்டிகளில், 3 குட்டிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. கடந்த செவ்வாய்க்கிழமை, தேஜஸ் என்ற 4 வயது ஆண் சிவிங்கிப் புலி, தனது வாழ்விடத்தில் இறந்தது. இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட சுராஜ் என்ற ஆண் சிவிங்கிப் புலி வெள்ளிக்கிழமை உயிரிழந்தது. கடந்த மாா்ச் மாதத்தில் இருந்து இந்தப் பூங்காவில் இறந்த 8-ஆவது சிவிங்கிப் புலி இதுவாகும்.

இந்நிலையில், குனோ தேசிய பூங்காவில் மேலும் 3 சிவிங்கி புலிகளுக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அண்மையில் கழுத்து புண் காரணமாக 2 சிவிங்கி புலிகள் இறந்து போயின. கழுத்தில் ஏற்படும் காயத்தில் உருவாகும் புழுக்களால் காயம் பெரிதாகி சிவிங்கிப் புலிகள் நோய்வாய்ப்படுவது தெரியவந்தது. இந்நிலையில், சிவிங்கிப் புலிகளை கண்காணிக்க கழுத்தில் காட்டப்படும் பட்டையால் தான் இந்த புழுக்கள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சிவிங்கிப் புலிகளின் தொடர் மரணம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

The post குனோ தேசிய பூங்காவில் தொடர்ந்து அதிகரிக்கும் சிவிங்கிப்புலிகளின் உயிரிழப்பு.. பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: