அனைத்து சாதியினரும் கோயிலுக்குள் செல்ல உரிமை உள்ளது பட்டியல் சமூகத்தினரை கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்தால் குண்டர் சட்டம்: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

மதுரை: பட்டியல் சமூகத்தினரை கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்தால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மங்களநாடு கிராமத்தைச் சேர்ந்த மதிமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் கடந்தாண்டு தாக்கல் செய்த மனுவில், மங்களநாடு வடக்கு கிராமத்தில் உள்ள மங்கள நாயகி அம்மன் கோயிலில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்கள் வழிபட அனுமதிப்பதில்லை. வரி மற்றும் நன்கொடை வாங்க மறுக்கின்றனர். எனவே, கோயிலை நிர்வகிக்க அறநிலையத்துறை சார்பில் செயல் அலுவலரை நியமிக்குமாறும், பட்டியல் சமூகத்தினரிடம் வரி மற்றும் நன்கொடைகள் வசூலிக்கவும்,அனைவரும் ேகாயிலுக்குள் வழிபாடு செய்வதை உறுதி செய்யவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா பிறப்பித்த உத்தரவு: காலனி ஆதிக்கத்தில் இருந்து நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. அரசியலமைப்பு சட்டத்தின்படி இறையாண்மை, சோசலிசம், மதசார்பற்ற குடியரசின் மூலம் ஒவ்வொரு குடிமகனுக்கும் சமநீதி, சமூக பொருளாதாரம் மற்றும் அரசியல் பாதுகாப்பை தந்துள்ளது. சுதந்திரமான சிந்தனையை வெளிப்படுத்துதல், அவரவர் நம்பிக்கை மற்றும் வழிபாடு, அனைவருக்குமான சம வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சகோதரத்துவம் ஒரு தனி நபரின் கண்ணியத்தையும், இந்த தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்துகிறது. இந்த சூழலில் குறிப்பிட்டவர்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பது நாம் ஒவ்வொருவரும் வெட்கி தலைகுனிய வேண்டிய விஷயம். அனைத்து சாதியினரும் கோயிலுக்குள் செல்லவும், சுவாமி தரிசனம் செய்யவும் உரிமை உள்ளது.

பிறப்பால் ஒருவர் தங்களை உயர்ந்தவராகவும், மற்றவரை தாழ்ந்தவராகவும் நினைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதுபோன்ற தீண்டாமை செயலை வேடிக்கை பார்க்க முடியாது. கடந்த 2021ல் புதுக்கோட்டை கலெக்டர் உத்தரவின்பேரில் நடந்த சமாதான கூட்டத்தின் முடிவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். கோயிலுக்குள் பட்டியல் சமூகத்தினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் சாமி கும்பிடுவதை கலெக்டர் உறுதி செய்ய வேண்டும். இதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அறந்தாங்கி ஆர்டிஓ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டாலோ, பொது அமைதி பாதித்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப தேவைப்பட்டால் சம்பந்தப்பட்டோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

The post அனைத்து சாதியினரும் கோயிலுக்குள் செல்ல உரிமை உள்ளது பட்டியல் சமூகத்தினரை கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்தால் குண்டர் சட்டம்: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: