அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரித்தது தேர்தல் கமிஷன்: இணையதளத்தில் வெளியீடு

புதுடெல்லி: அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வானதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து, அதற்கான அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. சென்னை வானகரத்தில் கடந்தாண்டு ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூடியது. அதில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டு இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த தீர்மானங்கள், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காமல், ஏற்காமல் இருந்து வந்தது.

இது தொடர்பான ரிட் மனுக்களை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ‘அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட விவகாரத்தில் ஒரு இறுதி முடிவை உடனடியாக வெளியிட வேண்டும்’ என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, அதிகப்படியான பெரும்பான்மை இருப்பதை அடிப்படையாக கொண்டு எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரிப்பதாக கடந்த ஏப்ரல் மாதம் தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணைய தரப்பில் அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் ஒரு பதிவேற்றம் செய்யப்பட்டு அதுகுறித்த கடிதமும் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது: கடந்தாண்டு ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு மற்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், அதிமுக பொதுச் செயலாளர் தேர்வு ஆகிய அனைத்தும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்பட்டுள்ளது. அதே போன்று எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதையும் இந்திய தேர்தல் ஆணையம் முழுமையாக அங்கீகரிக்கிறது. மேலும் நிர்வாகிகள் தொடர்பாக அதிமுக தரப்பில் அனுப்பப்பட்ட கடிதத்தையும் தேர்தல் ஆணைய தரப்பில் ஏற்கப்படுகிறது.

அதில் உள்ள, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் உள்பட அனைத்து நிர்வாகிகளையும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் இந்த அதிகாரபூர்வ அறிவிப்பை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி, தேர்வு செய்யப்பட்டுள்ளது மீண்டும் ஒரு முறை உறுதியாகி உள்ளது.

The post அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரித்தது தேர்தல் கமிஷன்: இணையதளத்தில் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: