மாமியாரை கொலை செய்த மருமகனுக்கு ஆயுள் தண்டனை: மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

 

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மடிப்பாக்கம் ஈஸ்வரன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு திருமணமாகி கீதா என்கிற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். மதுவுக்கு அடிமையான ஆறுமுகம் நாள்தோறும் குடித்துவிட்டு தனது மனைவி கீதாவிடம் சண்டையிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அப்போது, கடந்த வருடம் ஆகஸ்ட் 5ம் தேதி குடித்துவிட்டு வந்த ஆறுமுகம் கீதாவிடம் சண்டையிட்டு உள்ளார். இதனால், ஆத்திரமடைந்த கீதா காஞ்சி காமாட்சி நகரில் உள்ள தனது தாய் சித்ராவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து, அங்கு சென்ற ஆறுமுகம் கீதாவை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார். அப்போது, ஆறுமுகத்திற்கும் மாமியார் சித்ராவிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாமியார் சித்ராவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். தடுக்க முயன்ற மைத்துனர் உதயகுமாரை கத்தியால் குத்தி கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

இது தொடர்பாக மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கின் மீதான விசாரணை செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், குற்றம் சாட்டப்பட்ட ஆறுமுகத்தின் மீது அனைத்து குற்றச்சாட்டுகளும் அறிவியல் பூர்வமாக உறுதியானதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் நீதிபதி எழிலரசி தீர்ப்பளித்தார்.

The post மாமியாரை கொலை செய்த மருமகனுக்கு ஆயுள் தண்டனை: மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: