தாமரைப்பாக்கம் பகுதியில் அகற்றப்பட்ட நிழற்குடையை மீண்டும் நிறுவ வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

ஊத்துக்கோட்டை: தாமரைப்பாக்கம் பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து அகற்றப்பட்ட நிழற்குடைய மீண்டும் அதே இடத்தில் நிறுவவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் வியாபாரிகள், விவசாயிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் மாணவர்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தாமரைப்பாக்கத்தைச் சுற்றி புன்னப்பாக்கம், பாகல்மேடு, மாகரல் என 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வேலை, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்காக கூட்டுச்சாலை நான்கு முனை சந்திப்பிற்கு வருகின்றனர்.

பின்னர் அங்கிருந்து பெரியபாளையம், திருவள்ளூர், ஆவடி, பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி ஆகிய பகுதிகளுக்கு பேருந்து மூலமாக சென்று வருகின்றனர். அவ்வாறு செல்லும் பயணிகளுக்கு நிழற்குடை இல்லாததால் வெட்ட வெளியில், கொளுத்தும் வெயிலிலோ அல்லது மழை காலங்களில் மழையிலோ நனைந்து அவதிப்படும் நிலை உள்ளது. எனவே தாமரைப்பாக்கம் பகுதியில் பயணிகளின் வசதிக்காக பயணியர் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி தாமரைப்பாக்கம் கூட்டுசாலையில் புறக்காவல் நிலையம் அருகில் புதியதாக நவீன பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டது. அந்த பஸ் நிறுத்தத்தை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை விரிவாக்கப்பணிகள் நடந்தபோது அந்த நிழற்குடையை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றி சாலைக்கு அருகே ஒதுக்குபுறமான இடத்தில் போட்டுவிட்டனர். சாலைப்பணி முடிந்த பிறகும் அந்த நிழற்குடை மீண்டும் நிறுவப்படாமல் எலும்புக்கூடுபோல் போட்ட இடத்தில் குப்பையோடு குப்பையாக அப்படியே கிடக்கிறது. பயணிகள் தொடர்ந்து வெட்டவெளியில் நின்று வெயிலிலும் மழையில் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அந்த பஸ் நிறுத்தத்தை மீண்டும் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post தாமரைப்பாக்கம் பகுதியில் அகற்றப்பட்ட நிழற்குடையை மீண்டும் நிறுவ வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: