ஆண்டுக்கு ஒரு முறை இரவில் பூக்கும் நிஷாகந்தி பூ

கோவை : கோவை குறிச்சி பகுதியில் ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மட்டும் பூக்கும் நிஷாகந்தி பூவை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். சிவபெருமானுக்கு மிகுந்த விருப்பமான மலராக பிரம்ம கமலம் என்று அழைக்கப்படும் நிஷாகந்தி பூ உள்ளது. இது மிகுந்த மணம் நிறைந்தது. இந்த பூ ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இரவு நேரத்தில் பூத்து, அதிகாலையில் வாடிவிடும் தன்மை கொண்டது. இரவு ராணி என அழைக்கப்படும் இது, கள்ளிச்செடி வகையை சேர்ந்தது.

இதனை வீடுகளில் பொதுமக்கள் வளர்க்க ஆர்வம் காட்டுகின்றனர். பொதுவாக மே, ஜூன், ஜூலை மாதங்களில் இந்த பூவானது பூக்கும். இந்நிலையில், கோவை குறிச்சி பகுதியில் ஸ்ரீதர் என்பவரின் வீட்டில் நேற்று முன்தினம் இரவு நிஷாகந்தி பூ பூத்து, நேற்று அதிகாலையில் வாடியது. இது குறித்து ஸ்ரீதரின் மனைவி கலைராணி கூறுகையில்,“நாங்கள் கடந்த ஆண்டு பெரியநாயக்கன்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு நர்சரியில் இந்த செடியை வாங்கினோம். எங்கள் குழந்தை மகிழினிக்காக இதனை வளர்த்து வருகிறோம். நேற்று மாலை 7 மணிக்கு நிஷாகந்தி பூ பூக்க துவங்கியது.

அப்போது முதல் நல்ல நறுமணம் வீசியது. வெள்ளை நிறுத்துடன் காணப்பட்டது. நள்ளிரவு 12 மணியளவில் பூ முழுவதுமாக மலர்ந்தது. இதையடுத்து, விளக்கேற்றி பூஜைகள் செய்து மகிழ்தோம். எங்கள் மகள் மகிழினி பூவை பார்த்து ரசித்தார். இந்த பூ அதிகாலை 4 மணியளவில் வாடியது. இதனை எங்கள் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஆச்சரியத்துடன் வந்து பார்த்து சென்றனர்’’ என்றார்.

The post ஆண்டுக்கு ஒரு முறை இரவில் பூக்கும் நிஷாகந்தி பூ appeared first on Dinakaran.

Related Stories: