2025ம் ஆண்டுக்குள் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் விநியோகிக்க திட்டம்: இந்தியன் ஆயில் நிறுவனம் தகவல்

சென்னை: 2025ம் ஆண்டுக்குள் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் விநியோகிக்க திட்டமிட்டு இருப்பதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் செயல் இயக்குனர் அசோகன் தெரிவித்தார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில தலைவர் மற்றும் செயல் இயக்குனர் அசோகன் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய முன்னெடுப்புகள் குறித்து நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியன் ஆயில் நிறுவனத்தை பொறுத்தவரை, தமிழ்நாடு மிக முக்கியமான சந்தையாக இருக்கிறது.

அடுத்த சில ஆண்டுகளில் 54,000 கோடி ரூபாய் தமிழகத்தில் பல்வேறு முக்கிய திட்டங்களில் முதலீடு செய்ய இருக்கிறோம். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெட்ரோலுடன் 10 சதவீதம் எத்தனால் கலப்பை எட்டி இருக்கிறோம். 2025ம் ஆண்டிற்குள் இதை 20 சதவீதமாக உயர்த்தும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறோம். தமிழ்நாட்டில் இதுவரை 26 சில்லறை விற்பனை நிலையங்களில் 20 சதவீத எத்தனால் கலக்கப்பட பெட்ரோல் விநியோகம் நடந்து வருகிறது. 2024ம் ஆண்டுக்குள் இதை 66 நிலையங்களுக்கு விரிவுபடுத்த உள்ளோம். இந்தியன் ஆயில் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் 400 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை நிறுவியுள்ளது. மேலும் 300 நிலையங்களை தமிழகத்தில் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

சென்னை விமான நிலையத்திலும் ஒரு சார்ஜிங் நிலையம் அமைய இருக்கிறது. இந்த நிலையங்களில் ஒரு யூனிட் ரூ.24க்கு விற்பனை செய்யப்படுகிறது. தூய்மையான சுற்றுச்சூழலை உருவாக்குவதில் இந்திய ஆயில் நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது. அந்த வகையில் 2046ம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைய தீர்மானித்துள்ளோம். அதேபோல இந்தியன் ஆயில் நிறுவனம் பசுமை ஆற்றலுக்கு நாட்டை எடுத்துச் செல்லும் நோக்கில் புதுப்பிக்கதக்கவை, பசுமை ஹைட்ரஜன், சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மூலம் கார்பன் ஈடு செய்தல் போன்ற பல முயற்சிகளை செயல்படுத்தி வருகிறோம்.

இந்தியன் ஆயில் நிறுவனம் தொடர்ந்து எல்என்ஜி விநியோக நிலையங்களை அமைப்பதில் முனைப்பு காட்டி வருகிறது. தமிழகத்தில் 6 எல்என்ஜி விநியோக நிறுவனங்களை நிறுவ இருக்கிறோம். இந்த எரிபொருள் டீசலுக்கு மாற்றாகவும், நீண்ட தூரம் பயணிக்கும் வாகனங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். 5 கிலோ எடையுள்ள மினி சமையல் காஸ் சிலிண்டர் மற்றும் இரண்டு கிலோ எடையுள்ள சிலிண்டர்கள் இடம்பெயரும் மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post 2025ம் ஆண்டுக்குள் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் விநியோகிக்க திட்டம்: இந்தியன் ஆயில் நிறுவனம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: