ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய கோரி கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டம்

செங்கல்பட்டு: மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்த வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, செங்கல்பட்டு வட்ட கிளை சார்பில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக மின் வாரியத்தில் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்திட வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு மாவட்ட கலெக்டர் மூலம் மனு கொடுக்கும் போராட்டம் செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணை தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் வெங்கடேசன், ஜெயப்பிரகாஷ், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சிஐடியு மாவட்ட செயலாளர் பகத்சிங் தாஸ், மின் ஊழியர் சங்க திட்ட பொருளாளர் தீனதயாளன், திட்ட இணைச்செயலாளர்கள் மயில்வாகனன், சிவக்குமார், வடிவேல், உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு நிரந்தரப்படுத்த, தனியார் முதலாளிகளை ஊக்கிவிக்கும் அவுட் சோர்சிங் முறைக்கு தடை விதிக்க, ஒப்பந்த ஊழியர்களுக்கு சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், 10 ஆண்டுகளுக்கும் மேல் பொதுத்துறைகளில் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு, கலெக்டரிடம் மனு அளித்தனர்.

The post ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய கோரி கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: