திமுகவினர் குறித்து அநாகரீக பேச்சு: பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன் மீது கோவை போலீசில் புகார்கள் குவிகின்றன

கோவை: திமுகவினர் குறித்து அவதூறாக பேசிய பாஜ தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் மீது கோவை போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்து வருகிறது. கோவை காந்திபுரத்தில் வி.கே.கே.மேனன் சாலையில் கடந்த மாதம் 29ம் தேதி பாஜ சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில், வானதி சீனிவாசன் எம்எல்ஏ பேசினார். அப்போது அவர், திமுக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் குறித்து அநாகரீகமான முறையில் பேசினார். அவரது இந்த பேச்சுக்கு திமுகவினர் உள்பட அரசியல் கட்சியினர் பலரும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக கோவை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் வானதி சீனிவாசன் மீது திமுகவினர் ெதாடர்ந்து புகார்கள் அளித்து வருகிறார்கள். இந்நிலையில், பொள்ளாச்சி டிஎஸ்பி பிருந்தாவிடம் திமுக நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: வானதி சீனிவாசன் எம்எல்ஏ, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்எல்ஏக்களையும், வார்டு உறுப்பினர்களையும், தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசி இழிவுபடுத்தி உள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது. கோவை பீளமேடு திமுக பகுதி செயலாளர் துரை செந்தமிழ்செல்வன் தலைமையில் பீளமேடு காவல் நிலையத்தில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. மீது திமுகவினர் புகார் அளித்தனர்.

இதேபோல வானதி சீனிவாசன் எம்எல்ஏ மீது கோவை ரேஸ்கோர்ஸ், காந்திபுரம், சாய்பாபா காலனி, பீளமேடு உள்ளிட்ட மாநகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் திமுக பகுதி செயலாளர்கள் தனித்தனியாக புகார் செய்துள்ளனர். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் மனு கொடுக்கப்பட்டு உள்ளது. இதுதவிர தெற்கு மாவட்ட பகுதி, வடக்கு மாவட்டம் சூலூர், வடவள்ளி, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை சுமார் 40 புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

The post திமுகவினர் குறித்து அநாகரீக பேச்சு: பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன் மீது கோவை போலீசில் புகார்கள் குவிகின்றன appeared first on Dinakaran.

Related Stories: