தமிழ்நாடு இந்து சமய அறநிலைக்கொடைகள் சட்டம் 1959, சட்டப்பிரிவு 7A –ன் கீழ், அந்தந்த வருவாய் மாவட்ட எல்லைக்குட்பட்ட சட்டப்பிரிவு 46(iii) –ன் கீழ் வகைப்படுத்தப்பட்ட சமய அறநிறுவனங்களைத் தவிர மற்ற சமய அறநிறுவனங்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை (Non Hereditary Trustees) நியமனம் செய்திட தலைவர் மற்றும் உறுப்பினர்களை கொண்ட மாவட்ட குழுக்கள் 38 மாவட்டங்களுக்கும் அமைக்கப்பட்டுள்ளன. இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 49(1) ன் கீழுள்ள 24,518 திருக்கோயில்கள், 46(1) ன் கீழ் 2,103 திருக்கோயில்கள் மற்றும் 46(ii) ன் கீழ் 315 திருக்கோயில்களில் அறங்காவலர்களை நியமனம் செய்யப்பட்டுள்ள திருக்கோயில்கள் பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் நியமனம் செய்ய மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டன.
நிறைவாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், மாவட்டக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு 38 மாவட்டங்களுக்கும் முழுமையாக மாவட்டக் குழுக்களை அமைத்து திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் அவர்கள் சாதனை படைத்துள்ளார். உங்களது அணுகுமுறை மற்றும் செயல்பாடுகள் சமூக நோக்கம் கொண்ட இறையன்பர்களை அறங்காவலர்களாக தெரிவு செய்வதற்கும், திருக்கோயில்களின் மேம்பாட்டிற்கும், பக்தர்களுக்குத் தேவையான கூடுதல் வசதிகளை உருவாக்கி தருவதற்கும், தமிழ்நாடு அரசின் நற்பெயருக்கு மேலும் வலுவூட்டும் வகையிலும் அமைந்திட வேண்டும்.
இன்றைய கூட்ட ஆய்வுகளின்படி திருவண்ணாமலை மாவட்டக் குழுவின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது. அதனை போலவே பிற மாவட்டக் குழுக்களும் செயலாற்றி விரைவில் 100 சதவீதம் அறங்காவலர்களை நியமித்திட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 100 சதவீத இலக்கை எட்டுகின்ற முதல் மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் திருக்கரங்களால் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டை பெறுகின்ற வாய்ப்பை இந்து சமய அறநிலையத்துறை ஏற்படுத்தி தரும். நீதிமன்ற உத்தரவை நாம் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். ஆகவே, உங்கள் மாவட்டங்களில் சட்டப்பிரிவு 46(iii) –ன் கீழ் வகைப்படுத்தப்பட்ட சமய அறநிறுவனங்கள் மற்றும் நிர்வாகத் திட்டத்தின் கீழ் உள்ள திருக்கோயில்கள் தவிர மற்ற சமய அறநிறுவனங்களுக்கு தகுதியுள்ள பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை தேர்வு செய்து பெயர் பட்டியலை விரைவில் அளித்திட வேண்டும்.
இந்தப் பணிகளில் ஆய்வர்கள், செயல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் உறுதுணையாய் செயல்பட்டு துணைபுரிவார்கள். மண்டல இணை ஆணையர்களும் இப்பணிகளை வேகப்படுத்தி கண்காணித்திட வேண்டும். இந்து சமய அறநிலையத்துறைக்கு நற்பெயர் கிடைக்க வேண்டும். முதலமைச்சர் அவர்களின் புகழுக்கு புகழ் சேர்க்க வேண்டும் என்றால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற அறங்காவலர்கள் சிறப்பான முறையில் பணியாற்றுபவர்களாகவும், ஆன்மிகத்தில் நாட்டம் உள்ளவர்களாகவும் இருந்திட வேண்டும்.
அத்தகையவர்களை தேர்வு செய்து நியமனம் செய்துவிட்டால் இந்த ஆட்சியை எந்த வகையிலாவது அசைத்து பார்க்கலாம் என்று நினைப்பவர்களுக்கும், ஆன்மிகத்தை வைத்து அரசியல் செய்ய நினைப்பவர்களுக்கும் சிம்ம சொப்பனமாக அமையும். அடுத்து நடைபெறுகின்ற மாவட்டக் குழுக் கூட்டத்தில் அனைத்துத் திருக்கோயில்களுக்கும் அறங்காவலர்களை தேர்வு செய்யும் பணி 50 சதவீதத்தை கடந்து விரைவில் முழு இலக்கையும் எட்டுவோம் என்ற நிலையை நீங்கள் உருவாக்கிட வேண்டும் என்று தெரிவித்தார்.
The post அமைச்சர் சேகர்பாபு தலைமையில் திருக்கோயில்களில் அறங்காவலர் குழு நியமனம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்.! appeared first on Dinakaran.