தஞ்சை புன்னைநல்லூர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை குத்தகைக்கு வழங்கியதன் மூலம் ரூ.19.86 லட்சம் வருவாய்

சென்னை: தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை குத்தகைக்கு வழங்கியதன் மூலம் திருக்கோயிலுக்கு ரூ.19.86 லட்சம் வருவாய் கிடைக்கப் பெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும், அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தலின்படியும் இந்து சமய அறநிலையத்துறையின் பகட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு மீட்கப்படும் சொத்துக்களை திருக்கோயில்களுக்கு வருவாய் ஈட்டும் வகையில் ஏலத்தின் மூலம் குத்தகைக்கு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள அருள்மிகு புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான சுவாதீனம் பெறப்பட்ட 226.54 ஏக்கர் நிலத்தினை குத்தகைக்கு வழங்கியதன் மூலம் திருக்கோயிலுக்கு ரூ.19,86,389/- வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளது. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அருள்மிகு புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமாக அருள்மொழிப்பேட்டை கிராமத்தில் 237.47 ஏக்கர் நன்செய் மற்றும் புன்செய் நிலங்கள் விவசாயக் கூட்டுறவு சங்கத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. அக்கூட்டுறவு சங்கம் செயலிழந்து போன சூழலில் திருக்கோயிலுக்கு பெரும் வருமான இழப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அந்த நிலங்களை கோயில் நிர்வாகம் நீதிமன்றம் மூலம் சுவாதீனம் எடுத்து ஏலம் விட நடவடிக்கை மேற்கொண்டது.

இந்த ஏலத்தை நடத்த தடைகோரி ராமதாஸ் மற்றும் 9 நபர்கள் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்த நிலையில் தஞ்சாவூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஏலம் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டதைத் தொடர்ந்து, 2023 ஜீன் மாதம் 23, 26 மற்றும் 27 ஆகிய தினங்களில் திருக்கோயிலுக்குச் சொந்தமான 226.54 ஏக்கர் நிலம் ஆண்டு குத்தகைக்கு ஏலம் விடப்பட்டதன் மூலம் ரூ.19,86,389/- கிடைக்கப் பெற்றுள்ளது. இந்நிதியின் மூலம் திருக்கோயில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

The post தஞ்சை புன்னைநல்லூர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை குத்தகைக்கு வழங்கியதன் மூலம் ரூ.19.86 லட்சம் வருவாய் appeared first on Dinakaran.

Related Stories: