3 லட்சம் பேரிடம் ரூ.14,168 கோடி மோசடி செய்த விவகாரம் ஆருத்ரா, ஹிஜாவ், ஐஎப்எஸ் வழக்குகளில் 1,500 ஏஜென்ட்களின் அடையாளம் தெரிந்தது: தனிப்பிரிவில் புகார் அளிக்கலாம் என ஐஜி ஆசியம்மாள் தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் 3 லட்சம் பேரிடம் ரூ.14,168 கோடி மோசடி செய்த விவகாரத்தில் ஆருத்ரா, ஹிஜாவ், ஐஎப்எஸ் நிதி நிறுவனங்களின் வழக்குகளில் மட்டும் 1,500 ஏஜென்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். முதல்கட்டமாக 200 பேர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஆருத்ரா, ஹிஜாவ், ஐஎப்எஸ் உள்ளிட்ட 21 நிதி நிறுவனங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமானனோர், அதிக வட்டி மற்றும் இரட்டிப்பு பணத்துக்கு ஆசைப்பட்டு ரூ.14,168 கோடி முதலீடு செய்து ஏமாந்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அந்த நிறுவனங்களின் இயக்குனர்கள், ஏஜென்ட்டுகளை கைது செய்து வருகின்றனர். மேலும், வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளையும், அவர்களின் சொத்துகளை முடக்கவும் இன்டர்போல் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இது குறித்து சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் ஐஜி ஆசியம்மாள், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: ஆருத்ரா நிறுவனம் மீது இதுவரை நேரடியாக 3,500 புகார்களும், டிஆர்ஓ மூலம் ஒரு லட்சத்து 9 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் மீது புகார் அளிக்க வசதியாக தனி பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை 40 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக நிர்வாக இயக்குனர் ராஜசேகர் மற்றும் 8 இயக்குனர்கள் பதிவு செய்யப்படாத இயக்குனர்கள் 19 பேர், மேலாளர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 526 பேரிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. 603 ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். 4 ஆயிரம் பக்க அளவில் முதற்கட்ட குற்றப் பத்திரிகை ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஹிஜாவ் வழக்கில், மே மாதம் 17ம் தேதி குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முதலீட்டாளர்கள் 89 ஆயிரத்து 433 பேர். அதில் நேரடியாக 13 ஆயிரம் பேர் புகார் அளித்துள்ளனர். இதற்கும் தனியாக புகார் பெற பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 16ம் தேதி சுஜாதா காந்தா, கோவிந்தராஜுலு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐஎப்எஸ் விவகாரத்தில் 3,170 முதலீட்டாளர்களிடம் புகார்கள் பெறப்பட்டுள்ளது. மேலும் 19 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக 443 பேரிடம் சமீபத்தில் புகார்கள் வந்துள்ளது. கடந்த மே 25ம் தேதி இயக்குநர் ஜானகிராமன் கைது செய்யப்பட்டுள்ளார். ஓய்வு பெற்ற காவலர் ஹேமந்த் குமார் என்பவரையும் கைது செய்துள்ளோம். ஏஆர்டி நிறுவன மோசடி தொடர்பாக 1750 பேர் இதுவரை புகார் அளித்துள்ளனர். அவர்கள் 28.5 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். இதில் ஆல்வின் ராபின் மற்றும் அவரது சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பான 9 இடங்களில் நடந்த சோதனையில் 60 லட்ச ரூபாய் பணம், 30 சவரன் தங்கம், 60 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மூன்று கார்கள் மற்றும் 24 வங்கிகள் முடக்கப்பட்டுள்ளன. அவர்களின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.2.5 கோடி முடக்கப்பட்டுள்ளது. முகப்பேரில் உள்ள ஏஆர்டி மாலில் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நியோமேக்ஸ் வழக்கில், 15 புகார்கள் வந்துள்ளது. வந்த புகாரிகளின் படி ரூ.4.50 கோடிமதிப்பில் மோசடி நடந்துள்ளது. இதில் 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 62 பத்திர ஆவணங்கள் பிரிவுகள் செய்யப்பட்டுள்ளன.ஐப்எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில், 132 சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதன் மதிப்பு ரூ.37 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. ஆருத்ரா வழக்கில், 49 சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதன் வழிகாட்டுதல் மதிப்பு 23 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. பாஜ நிர்வாகியாக இருந்த ஹரிஷ் பெயரில் உள்ள 5 சொத்துக்கள் அவரது மனைவி பெயரில் உள்ள ஒரு சொத்து அவரது சகோதரி மாலினி பெயரில் ஒரு சொத்தும், ஹரிஷ் உறவினர்கள் பெயரில் 2 சொத்துகளும், ஹரிஷ் நண்பர் பெயரில் 2 சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஹிஜாவ் மோசடி வழக்கில், மொத்தம் 139 சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதன் மதிப்பு ரூ.13.81 என கணக்கிடப்பட்டுள்ளது. ஆருத்ரா, ஹிஜாவ், ஐஎப்எஸ் ஆகிய 3 வழக்குகளில் 9 பேருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆருத்ரா வழக்கில், நடிகர் ஆர்.கே.சுரேஷ், முக்கிய இயக்குநரான ரூசோ மூலம் ரூ.12.5 கோடி பணம் கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த பணம் எந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஆர்.கே.சுரேஷ் விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பியும் இதுவரை ஆஜராகவில்லை. முக்கியமான ஆருத்ரா ஹிஜாவு மற்றும் ஐஎப்எஸ் வழக்குகளில் தலா 500 ஏஜென்டுகள் என 1,500 ஏஜென்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக ஒவ்வொரு நிதி நிறுவனத்திலும் 100 ஏஜென்டுகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்யும் நடவடிக்கை துவங்கி உள்ளோம். குறிப்பாக ஆருத்ரா வழக்கில், 35 ஏஜென்டுகளிடம் விசாரணை நடத்தி உள்ளோம். இவ்வாறு ஐஜி ஆசியம்மாள் தெரிவித்தார்.

* ஆருத்ரா இயக்குநர்களிடம் ரூ.12.5 கோடியை ரொக்கமாக பெற்ற நடிகர் ஆர்.கே.சுரேஷ் குற்றப்பத்திரிகையில் தகவல்
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி தொடர்பாக, நடிகர் ஆர்.கே.சுரேசுக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இவர், கடந்த 5 மாதங்களாக துபாயில் குடும்பத்துடன் தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்யும் பணியில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், பாஜ பிரமுகரும், நடிகருமான ஆர்.கே..சுரேஷ் தனது செல்வாக்கை பயன்படுத்தி இந்த மோசடி வழக்குகளில் இருந்து ஆருத்ரா இயக்குநர்களை காப்பாற்றுவதாக ரூசோ மற்றும் ஹரிஷ் மூலம் ரூ.12.5 கோடி பணம் ரொக்கமாக வாங்கியது தெரியவந்துள்ளது. முதலில் ரூ.10 கோடி வாங்கியதாக கூறப்பட்டது. ஆனால் குற்றப்பத்திரிகையில் ரூ.12.5 கோடி வாங்கியது தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவரை இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சேர்த்துள்ளனர்.

The post 3 லட்சம் பேரிடம் ரூ.14,168 கோடி மோசடி செய்த விவகாரம் ஆருத்ரா, ஹிஜாவ், ஐஎப்எஸ் வழக்குகளில் 1,500 ஏஜென்ட்களின் அடையாளம் தெரிந்தது: தனிப்பிரிவில் புகார் அளிக்கலாம் என ஐஜி ஆசியம்மாள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: