ஆண்டிபட்டி, கம்பம் பகுதியில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு

*கிலோ ரூ.100க்கு விற்பனை; விவசாயிகள் மகிழ்ச்சி

ஆண்டிபட்டி/கம்பம் : ஆண்டிபட்டி பகுதியில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.100க்கு விற்கப்பட்டதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் தேனி, ஆண்டிபட்டி, சின்னமனூர் பகுதிகளில் காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த காய்கறி மார்க்கெட் மூலம் தேனி மாவட்டத்தில் விளையும் காய்கறிகள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும், கேரள மாநிலத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த காய்கறி மார்க்கெட்டிற்கு கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. இதன்காரணமாக தக்காளி விலை அதிகரித்து கொண்டே வந்தது. தற்போது 14 கிலோ கொண்ட ஒரு தக்காளி பெட்டி ரூ.1000 முதல் 1100 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன்காரணமாக தக்காளி பயிரிட்ட விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் சில்லறையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100ஆக உயர்ந்ததால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்தும் குறைந்து உள்ளதால் தற்போது விலை உயர்வு மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வரத்து குறைவாக உள்ளதால் தேனி மாவட்டத்தில் தக்காளிக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதியில் விளையும் தக்காளியை, வியாபாரிகள் விவசாயிகளிடம் நேரடியாகவே சென்று வாங்கி வருகின்றனர். தக்காளி விலை உயர்வு விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளித்தாலும் அதை வாங்கி பயன்படுத்தும் பொதுமக்களுக்கு பெரும் துன்பத்தையே அளித்துள்ளது.

* கம்பம் உழவு சந்தையில் தக்காளியின் விலை நான்கு நாளில் 40 ரூபாய் அதிகரித்து கிலோ ஒன்றுக்கு 62 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பருவமழை காலத்தில் அதிக அளவில் தக்காளி பயிரிட விவசாயிகள் தயக்கம் காட்டி வருவார்கள். தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டால் தக்காளி அதிக அளவில் இழப்பு ஏற்படும் என்பதால், விவசாயிகள் தக்காளி பயிரிடுவதை தவிர்த்து வந்தனர்.

இந்த நிலையில் இந்த வருடம் தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போனதால் கம்பம் மற்றும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் தக்காளி விளைச்சல் குறைவாகவே காணப்படுகிறது. தக்காளி வரத்து குறைந்ததால் கடந்த வாரம் 12 கிலோ முதல் 13 கிலோ வரை உள்ள தக்காளி பெட்டி ரூ.150 க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி, இந்த வாரம் ரூ.750 வரை விலை போனது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு கம்பம் உழவர் சந்தையில் ரூ.22க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி, நேற்று ரூ.62 க்கு விற்பனை செய்யப்பட்டது. வரத்து குறைவாக உள்ளதால் தக்காளி விலை மளமளவென ஏறிவிட்டதாகவும், ஓரிரு நாட்களில் பக்ரீத் பண்டிகை கொண்டாட இருப்பதாலும் தக்காளியின் விலை ஏறி உள்ளதாக உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post ஆண்டிபட்டி, கம்பம் பகுதியில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: