ஒவ்வொரு ஆண்டும் மே முதல் செப்ட்டம்பர் வரையில் அதீத கடல் சீதோஷ்ண நிலை உருவாகிறது. இந்த வானிலை இந்த சரக்கு போக்குவரத்தான கடற்பயணத்திற்கு உகந்ததல்ல என்பதால் நிறுத்தப்படும். பின்னர் மீண்டும் சீதோஷ்ண நிலை சரியான பின்னர் செப்டம்பர் இறுதியில் துவக்கப்படும். தற்போது தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து மாலத்தீவுக்கு மீண்டும் சரக்கு தோணி போக்குவரத்து தொடங்க இருக்கிறது. இங்கிருந்து தற்போது மாலிக்கு 20 சரக்கு தோணிகளும், லட்சத்தீவுகளுக்கு 15 தோணிகளும் என 25 சரக்கு தோணிகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
உரங்கள், உருளைகிளங்கு, வெங்காயம், பல்லாரி, முட்டை உள்ளிட்ட சில காய்கனிகள் மட்டும் கொண்டு செல்லப்படுகின்றன. இரு நாடுகளுக்கு இடையேயான இணைப்பு மற்றும் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு மற்றும் மாலத்தீவுகளுக்கு இடையேயான நேரடி தோணி சேவை மீண்டும் துவங்கப்படவுள்ளது. அட்டு, ஹிதிதாதூ மற்றும் மாலத்தீவு போன்ற முக்கிய இடங்களுக்கு நேரடி சரக்கு தோணி போக்குவரத்து துவங்குகிறது.
தற்போது துவங்கப்படும் இந்த சரக்கு தோணி போக்குவரத்து 2025 ஏப்ரல் 30ம்தேதி வரை முதல் கட்டமாக 7 மாதங்கள் இந்த சேவை நடக்க இருக்கிறது. தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவு 500 கடல் நாட்டிக்கல் மைல் தூரத்தில் இருப்பதால் இந்த தூரத்தை கடக்க 2½ நாட்கள் வரை ஆகும். இதற்காக தற்போது தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் 3 தோணிகள் தயார் நிலையில் உள்ளன.
இந்தோணிகளில் கட்டுமானத்திற்கு தேவைப்படும் பொக்லைன் எந்திரங்கள், கிரேன்கள், தொட்டிகள், லாரிகள், இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள், மெத்தைகள் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள், பிளாஸ்டிக் வாட்டர் டேங்குகள் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றப்பட்டு வருகின்றன. இவற்றுடன் உணவு பொருட்களான காய்கறி, முட்டை, மளிகை பொருட்களும் ஏற்றப்படுகின்றன.
இதற்கிடையே கடல் சீதோஷ்ண நிலை, கடற்காற்று ஆகியவை குறித்து எச்சரிக்கை குறித்து அறிந்தபின் ஓரிரு நாட்களில் 3 தோணிகள் புறப்பட்டு செல்கின்றன. குமரிக்கடல் பகுதியில் தான் அதிகமான கடல் சீற்றம் காணப்படும். இதனை கடந்து சென்றுவிட்டால் சரக்கு தோணிகளின் பயணம் எளிதாகிவிடும் என்று கூறப்படுகிறது. எனவே இது குறித்த வானிலை ஆய்வு மைய அறிவிப்பு வந்ததும் இந்த சரக்கு தோணிகள் புறப்பட்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post தூத்துக்குடி – மாலத்தீவு இடையே சரக்கு தோணி போக்குவரத்து ஓரிரு நாட்களில் துவக்கம் appeared first on Dinakaran.