கம்பம் அருகே மகாத்மா காந்திக்கு ஆலயம் அமைத்து வழிபடும் மக்கள்

*தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் முன்மாதிரி கிராமம்

கம்பம் : கம்பம் அருகே, மகாத்மா காந்திக்கு ஆலயம் அமைத்து முக்கிய தினங்களில் பொதுமக்கள், மாணவ, மாணவியர் வழிபாடு நடத்தி மரியாதை செலுத்துகின்றனர்.தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி கிராமத்தில் 80க்கும் மேற்பட்ட சுதந்திர போராட்ட தியாகிகள் வாழ்ந்து மறைந்துள்ளனர். இவர்கள், நமது நாட்டு விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு, பல்வேறு காலகட்டங்களில் சிறை சென்றுள்ளனர்.

இந்நிலையில், சுதந்திரப் போராட்டத்தின் நினைவாகவும், நாட்டுக்காக தியாகம் செய்த தியாகிகளை பெருமைப்படுத்தும் விதமாகவும், கிராமத்தில் உள்ள கம்பம் சாலையில் மகாத்மா காந்திக்கு கோயில் கட்டி, அவரது உருவச்சிலை அமைக்க கடந்த 1985ம் ஆண்டு கிராம மக்கள் முடிவு செய்தனர். இதையடுத்து சுதந்திர போராட்ட தியாகி முன்னாள் எம்எல்ஏ பாண்டியராஜ் தலைமையில் குழு அமைத்து, அனைத்து சமுதாய மக்களின் ஒத்துழைப்பு, நன்கொடையுடன் 6 மாதங்களில் மகாத்மா காந்திக்கு கோவில் கட்டி, அதனுள் வெண்கலத்தினாலான அவரது உருவச் சிலையும் நிறுவப்பட்டது.

இந்த ஆலயத்தில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளூர் தியாகிகளின் படங்களும் இடம்பெற்றுள்ளன. இக்கோயிலை கடந்த 29.12.1985ல் அன்றைய துணை ஜனாதிபதி வெங்கட்ராமன் திறந்து வைத்தார். அன்று முதல் இன்று வரை ஆண்டுதோறும் சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தியடிகள் பிறந்த தினம், தேசத்தலைவர்களின் பிறந்த நாட்களில் கிராம மக்கள், பள்ளி மாணவ, மாணவியர் வந்து வழிபாடு செய்து மரியாதை செலுத்துகின்றனர்.

இதன்படி காந்தி பிறந்த நாளான இன்று கோயில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. கிராம மக்கள், உள்ளூரைச் சேர்ந்த மாணவ, மாணவியர் கோயிலுக்கு வந்து தேசப்பிதாவுக்கு மரியாதை செலுத்தினர். தியாகிகளை போற்றுவதில் இந்த கிராமம் மற்ற கிராமங்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது.

The post கம்பம் அருகே மகாத்மா காந்திக்கு ஆலயம் அமைத்து வழிபடும் மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: