இனாம்நில விவசாயிகள் இயக்க ஆலோசனை கூட்டம்

திருச்சி: திருச்சியில் நடந்த இனாம்நில விவசாயிகள் இயக்கத்தின் ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசுக்குக 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று இனாம் நில விவசாயிகள் இயக்கம் சார்பில் மாநில அளவில் ஆலோசனை கூட்டம், மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையிடமிருந்தும், வக்பு வாரியத்திடமிருந்தும் இனாம் நிலங்களை மீட்பது, உழவர்கள், வீடு மனை, நில உரிமையாளர்களின் நில உரிமையை மீட்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கு 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் சிறு இனாம்கள் ஒழிப்புச் சட்டம் 1963யை மீண்டும் அமல்படுத்தி பட்டா வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு 2007ல் பத்திரபதிவு சட்டம் 22ஏவில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தில் சட்ட திருத்தம் இனாம் நிலங்களுக்கு பொருந்தாது என்று திருத்தம் செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க உறுப்பினர்கள், இனாம் நில விவசாயிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் என மொத்தம் 50 பேர் கலந்து கொண்டனர்.

The post இனாம்நில விவசாயிகள் இயக்க ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: