முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து எழுத்தாளர்கள் உதயசங்கர், ராம் தங்கத்துக்கு பால புரஸ்கார், யுவ புரஸ்கார் விருது

சென்னை: பால சாகித்ய புரஸ்கார் மற்றும் யுவ சாகித்ய புரஸ்கார் ஆகிய விருதுகளை பெற்ற எழுத்தாளர்கள் உதயசங்கர், ராம் தங்கத்துக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். டிவிட்டர் பதிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது: நம் வரலாற்றின் வேர்களை இளையோர் அறிய, கீழடியைத் தன் கதைக்களமாய்க் கொண்டு ஆதனின் பொம்மையை உருவாக்கி, அதற்கு அங்கீகாரமாக பால சாகித்ய புரஸ்கார் பெற்றுள்ள எழுத்தாளர் உதயசங்கர், இளமையில் பசி எனும் வலியை நாஞ்சில் நாட்டு மொழியில் மிக அழுத்தமான விவரிப்புகளால் பதிவு செய்த திருக்கார்த்தியல் சிறுகதைத் தொகுப்புக்காக யுவ சாகித்ய புரஸ்கார் பெற்றுள்ள ராம் தங்கத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் எனது மனமார்ந்த பாராட்டுகள்.

இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழர்களின் வரலாறு: கோவில்பட்டியை சேர்ந்தவர் எழுத்தாளர் உதயசங்கர். இவர், எழுதிய ஆதனின் பொம்மை என்ற இளையோர் நாவலுக்காக ஒன்றிய அரசின் சாகித்ய அகாடமியின் பாலபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் உதயசங்கர், நீலக்கனவு, யாவர் வீட்டிலும், பிறிதொரு மரணம் உள்ளிட்ட சிறுகதை நூல்களையும் எழுதியுள்ளார். பாலபுரஸ்கார் விருது குறித்து எழுத்தாளர் உதயசங்கர் கூறுகையில், ‘‘இது தமிழர்களின் வரலாற்றை சொல்லக்கூடிய நாவல். கடந்த கால வரலாறு குறித்து இளைஞர்கள், குழந்தைகளிடம் சரியாக எடுத்துச்செல்ல வேண்டும் என்பதற்காக ஓராண்டு காலம் ஆய்வு செய்து இந்த நாவலை எழுதினேன். கீழடியில் இருந்து சிந்துவெளிக்கு சென்று வரக்கூடிய கால நிகழ்வாக எழுதினேன்’’ என்றார்.

மக்களின் வலி: ராம் தங்கம், நாகர்கோவில் வடசேரியை சேர்ந்தவர். 2017ல் ‘திருக்கார்த்தியல்’ என்கிற முதல் சிறுகதை வெளிவந்தது. விருது ராம் தங்கம் கூறுகையில், ‘‘மாணவர் விடுதி சிறுவர்களின் வாழ்க்கை, குழந்தை தொழிலாளர்கள் போன்ற பல்வேறு கருத்துகளை மையமாக வைத்து சிறுகதை தொகுப்புகள் எழுதியுள்ளதன் பலனாக இந்த விருது கிடைத்துள்ளது. சமூகத்தில் பின் தங்கிய மக்களின் வலிகளை எழுத்துக்கள் மூலம் தொடர்ந்து வெளிப்படுத்த இது ஊக்கமாக அமைந்துள்ளது’’ என்றார்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து எழுத்தாளர்கள் உதயசங்கர், ராம் தங்கத்துக்கு பால புரஸ்கார், யுவ புரஸ்கார் விருது appeared first on Dinakaran.

Related Stories: