நெல்லையப்பர் கோயிலில் அங்குரார்ப்பணம்

நெல்லை, ஜூன் 23: நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று அங்குரார்ப்பணம் நடந்தது. தென்தமிழகத்தில் பாரம்பரியமிக்க சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயில் ஆனி திருவிழா சிறப்பு மிக்க விழாக்களில் ஒன்றாகும். இந்தாண்டுக்கான ஆனி பெருந்திருவிழா நாளை (24ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் கோலாகலமாக நடக்கிறது. இதன் சிகரமான தேரோட்ட வைபவம் ஜூலை 2ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை நடக்கிறது.

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று அங்குரார்ப்பனம் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கோயிலில் இருந்து அஸ்திர தேவர் தங்க பல்லக்கில் வெளித்தெப்பம் அருகே அங்குர விநாயகர் கோயிலுக்கு எழுந்தருளினார். தொடர்ந்து வெளிதெப்பத்தில் இருந்து புனித மண் எடுக்கப்பட்டு விநாயகர் கோயிலில் வைத்து நவதானியங்களோடு சிறப்பு பூஜைகள் நடந்தன. அங்குர விநாயகர் கோயிலில் தீபாராதனை நடந்தது. இதையடுத்து கோயில் யானை காந்திமதி முன்செல்ல தங்க பல்லக்கில் பிடிமண் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் கோயிலில் யாகசாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. மூலவர் மற்றும் உற்சவருக்கு காப்பு கட்டும் நிகழ்வும் தொடர்ந்து நடந்தது.

The post நெல்லையப்பர் கோயிலில் அங்குரார்ப்பணம் appeared first on Dinakaran.

Related Stories: