தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் வெற்றியுடன் தொடங்கிய லெபனான்

பெங்களூர்: தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில்(எஸ்ஏஎப்எப்) முதல்முறையாக களமிறங்கி உள்ள லெபனான் அணி வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியுள்ளது. தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக லெபனான் அணி களம் இறங்கி உள்ளது. இந்த தொடரில் விளையாடும் அணிகளில் தரவரிசையில் முன்னணியில் இருக்கும் அணியும் லெபனான் தான். பெங்களூரில் நடக்கும் இந்தப்போட்டியில் இந்தியா உட்பட 8 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஏ பிரிவில் உள்ள இந்தியா நேற்று முன்தினம் பாகிஸ்தானை 4-0 என்ற கோல் கணக்கில் பந்தாடியது. இந்தியா தனது 2வது லீக் ஆட்டத்தில் நாளை இரவு நேபாளம் அணியுடன் மோத உள்ளது.

இந்நிலையில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள லெபனான் தனது முதல் லீக் ஆட்டத்தில் நேற்று வங்கதேசத்துடன் மோதியது. லெபனான் வீரர் ஹசன் மாடவுக் ஆட்டத்தின் 79வது நிமிடத்தில் கோலடித்து அணிக்கு முன்னிலைப் பெற்று தந்தார். இடைநிறுத்தப்பட்ட நேரத்தை ஈடு செய்ய ஆட்டத்தின் முடிவில் அளிக்கப்பட்ட கூடுதல் நேரத்தில் லெபனான் வீரர் கலீல் பேடர் ஒரு கோல் அடித்தார். வங்கதேச வீரர்கள் கடுமையாக போராடியும் பந்தை கைப்பற்றவே பெரும்பாடு பட்டனர். ஆட்டம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த லெபனான் கடைசியில் 2-0 என்ற கோல் கணக்கில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. லெபனான் தனது 2வது ஆட்டத்தில் நாளை மறுதினம் பூட்டானை எதிர்கொள்கிறது.

The post தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் வெற்றியுடன் தொடங்கிய லெபனான் appeared first on Dinakaran.

Related Stories: