ராகுல்காந்தி குறித்து அவதூறு அனிமேஷன் வீடியோ; பாஜக தேசிய தலைவர் உள்ளிட்டோர் மீது வழக்கு: கர்நாடகா அமைச்சர் பிரியங்க் கார்கே ஆவேசம்

பெங்களூரு: ராகுல் காந்தி குறித்து அவதூறு அனிமேஷன் வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி மற்றும் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் மீது கர்நாடக போலீசார் வழக்குபதிந்துள்ளனர். கர்நாடக மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரி தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, ஹைகிரவுண்ட்ஸ் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ‘பாஜகவின் தகவல்தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா கடந்த 17ம் தேதி வெளியிட்ட அனிமேஷன் வீடியோ பதிவானது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை அவமதிக்கும் வகையிலும், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர்களை தேசதுரோகிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ராகுல்காந்தியின் பேச்சுகள் திரித்து கூறப்பட்டுள்ளன.

மத வெறுப்புணர்வை தூண்டும் வகையில், குறிப்பிட்ட மதப்பிரிவினரை கொச்சை படுத்தும் விதமாக அந்த அனிமேஷன் வீடியோவில் கருத்துகள் உள்ளன. இந்த வீடியோ பதிவை ஆதரிக்கும் வகையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, சண்டிகர் பிரிவு தலைவர் அருண் சூட் உள்ளிட்டோர் ரீடுவிட் செய்துள்ளனர். எனவே அவர்கள் மீது வழக்குப்பதிய வேண்டும்’ என்று கோரியிருந்தார். அதையடுத்து ஹைகிரவுண்ட்ஸ் போலீசார், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தகவல்தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா, சண்டிகர் பிரிவு தலைவர் அருண் சூட் ஆகியோர் மீது வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post ராகுல்காந்தி குறித்து அவதூறு அனிமேஷன் வீடியோ; பாஜக தேசிய தலைவர் உள்ளிட்டோர் மீது வழக்கு: கர்நாடகா அமைச்சர் பிரியங்க் கார்கே ஆவேசம் appeared first on Dinakaran.

Related Stories: