சித்தாலப்பாக்கம் ஊராட்சி தொடக்க பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம்: சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார்

சாலவாக்கம்: சாலவாக்கம் அருகே சித்தாலப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடத்தை சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம் சிறுமயிலூர் ஊராட்சி சித்தாலப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் படிக்கின்றனர். இந்த பள்ளிக்கு போதிய வகுப்பறை கட்டிடம் இல்லை. எனவே, உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரிடம் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையேற்று, உத்திரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.18.70 லட்சம் மதிப்பில் புதிய பள்ளி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

மேலும், தமிழ்நாடு முழுவதும் ஆரம்ப பள்ளிகள் நேற்று தொடங்கியதையொட்டி கட்டி முடிக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தை திறக்க சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் நடவடிக்கை மேற்கொண்டார். அதனையடுத்து, பள்ளி மாணவர்களை வரவேற்கும் விதமாக வாழை தோரணங்கள், வண்ண பலூன்கள் உள்ளிட்டவை கட்டி பள்ளி கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில், ஊராட்சி மன்ற தலைவர் சற்குணம் மாதவன் தலைமை தாங்கினார். ஒன்றிய திமுக செயலாளர் குமார் முன்னிலை வகித்தார். முன்னதாக, பள்ளி தலைமை ஆசிரியை நிர்மலா அனைவரையும் வரவேற்றார்.

இதில், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர், சுந்தர் எம்எல்ஏ பேசுகையில், ‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டு கால ஆட்சியில் பள்ளி கல்வித்துறையை மற்ற மாநிலங்களே உற்றுநோக்கும் அளவிற்கு சிறந்த துறையாக மாற்றி வருகிறார். மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கி பள்ளி சிறுவர் சிறுமியர்களை ஊக்கப்படுத்தி தமிழ்நாட்டில் சிறப்பாக ஆட்சி செய்கிறார்’ என்றார்.

இதில், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சிவராமன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், லோகநாதன், கோமளா, பொறியாளர் பாளையம், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் வெங்கடேசன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கல்யாணசுந்தரம், அன்புராஜ், ஒன்றிய பொருளாளர் பாலமுருகன், மாவட்ட பிரதிநிதி வெங்கடசுப்பிரமணி உள்ளிட்ட திமுகு நிர்வாகிகள் மற்றும் கிராமமக்கள் கலந்து கொண்டனர்.

The post சித்தாலப்பாக்கம் ஊராட்சி தொடக்க பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம்: சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: