ஒன்றிய அரசுக்கு எதிராக திட்டமிட்டப்படி வேலைநிறுத்தம்: என்எல்சி தொழிலாளர் சங்கம் அறிவிப்பு

புதுச்சேரி: கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்ததொழிலாளர்களை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பணி நிரந்தரம் செய்யவேண்டும். அதுவரை குறைந்தபட்ச ஊதியமாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1ம்தேதி என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் நிர்வாகத்துக்கு வேலைநிறுத்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஒன்றிய தொழிலாளர் துறையின் உதவி ஆணையர் ரமேஷ் என்எல்சி நிர்வாகத்துக்கும் ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகிகளுக்கும்அழைப்பாணை அனுப்பி இருந்தார்.

இதன்படி, புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள மத்திய தொழிலாளர் துறையின் உதவி ஆணையர் அலுவலகத்தில் நேற்று பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க என்எல்சி ஒப்பந்ததாரர்கள் மற்றும் சொசைட்டி மேலாண் இயக்குநருக்கு உதவி ஆணையர் உரிய முறையில் அழைப்பாணை வழங்கவில்லை. இதனால் அவர்கள் கலந்துகொள்ளவில்லை. இதன் காரணமாக பேச்சுவார்த்தையை தொடராமல் தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தையை புறக்கணித்து வெளியேறினர்.

இதுகுறித்து என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க சிறப்பு தலைவர் சேகர் கூறியதாவது: என்எல்சியில் பணிபுரியக்கூடிய 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி நிர்வாகத்திடம் கடந்த 1ம் தேதி வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுத்தோம். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மத்திய தொழிலாளர் துறையின் உதவி ஆணையர் எங்களுக்கும் நிர்வாகத்துக்கும் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், ஒப்பந்ததாரர்கள், சொசைட்டி மேலாண் இயக்குநருக்கு முறையாக அழைப்பு விடுக்காததால், அவர்கள் யாரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவில்லை.

என்எல்சியில் நிறைவேற்றப்படாத ஒப்பந்தங்கள் எல்லாம் மீறப்பட்டுள்ளது. நேரடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டிய தொழிலாளர் துறை, அதனையும் ஒரு பேச்சுவார்த்தை மூலம் மழுப்பி இழுத்தடிக்க பார்க்கிறது என்று எழுத்துப்பூர்வமாக எங்களுடைய ஆட்சேபனையை தெரிவித்துள்ளோம். இவற்றையெல்லாம் மத்திய தொழிலாளர் துறைக்கு அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளோம். என்எல்சியில் வரும் 15ம்தேதி பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம். அன்று தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு வேலைநிறுத்த போராட்ட தேதியை அறிவிப்போம். வேலைநிறுத்தம் வந்தால், புதுச்சேரிக்கும், தமிழகத்திற்கும் மின்சாரம் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். இவ்வாறு கூறினார்.

The post ஒன்றிய அரசுக்கு எதிராக திட்டமிட்டப்படி வேலைநிறுத்தம்: என்எல்சி தொழிலாளர் சங்கம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: