வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 2122.10 ஏக்கர் நிலங்களுக்கு திருக்கோயில் பெயரில் பட்டா பெறப்பட்டுள்ளது: அமைச்சர் சேகர்பாபு தகவல்

நாகை: வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 2122.10 ஏக்கர் நிலங்களுக்கு திருக்கோயில் பெயரில் பட்டா பெறப்பட்டுள்ளது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகளும், நிலவுடமைப் பதிவு மேம்பாட்டுத் திட்ட நடவடிக்கையின் போது தவறுதலாக பட்டா மாற்றம் செய்யப்பட்ட இனங்கள் மற்றும் வருவாய்த்துறையில் கணினி சிட்டா தயாரிக்கும் போது தவறுதலான பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட இனங்கள் குறித்து சம்மந்தப்பட்ட திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் மாவட்ட வருவாய் நிர்வாகத்திடம் மேல்முறையீடு செய்து அவற்றை மீட்கும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம், வேதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான அகஸ்தியம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 2122.10 ஏக்கர் நிலங்களுக்கு திருக்கோயில் பெயரில் பட்டா பெறப்பட்டுள்ளது என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற 07.05.2021 முதல் 31.05.2023 வரை திருக்கோயில்களுக்கு சொந்தமான ரூ.4,505 கோடி மதிப்பீட்டிலான 4,802 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. நிலவுடமைப் பதிவு மேம்பாட்டுத் திட்டத் தவறினால் பட்டா மாற்றம் செய்யப்பட்ட இனங்களில் 1771.17 ஏக்கர் நிலங்களும், கணினி சிட்டா தயாரிப்பில் தவறான இனங்களில் 2541.26 ஏக்கர் நிலங்களும் மேல்முறையீட்டின் மூலம் மீட்கப்பட்டுள்ளன. மேலும் திருக்கோயில் நிலங்களை அளவீடு செய்யும் பணிகளில் இதுவரை 1,16,886 ஏக்கர் நிலங்கள் அளவிடப்பட்டு, எல்லை கற்கள் நடப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகவும், சப்த விடங்கத் தலங்களில் ஒன்றாகவும் விளங்குகின்ற வேதாரண்யம், வேதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான அகஸ்தியம்பள்ளி கிராமத்திலுள்ள நிலங்கள் வேதாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானத்திற்கு சொந்தமான சர்வமான்ய நிலங்கள் எனவும், அந்நிலங்கள் உப்பு நிறுவனத்தின் அனுபவத்தில் உள்ளதாகவும், அந்நிலங்களுக்கு உப்பு நிறுவனம் குத்தகை தொகையினை திருக்கோயிலுக்கு வழங்கிவருவதாகவும், அந்நிலங்களை சர்வே செய்து திருக்கோயில் பெயரில் பட்டா வழங்கிட சென்னை உதவி நிலவரித்திட்ட (வடக்கு) அலுவலர் நீதிமன்றத்தில் அத்திருக்கோயில் செயல் அலுவலர்களால் 2006-ம் ஆண்டு முதல் தொடர்ந்து முறையீடு செய்யப்பட்டு வந்த நிலையில், முதலமைச்சர் இந்நிகழ்வில் சிறப்பு கவனம் செலுத்தி துரித நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரைகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து இவ்வழக்கில் துறையின் மூலம் பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. அதனடிப்படையில் திருக்கோயில் நிர்வாகத்தால் தொடரப்பட்ட வழக்கில் வேதாரண்யம் வட்டம், அகஸ்தியம்பள்ளி கிராமத்தில் புல எண்.284-க்கு கட்டுப்பட்ட 2122.10 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட நிலங்களுக்கு தமிழ்நாடு சிறு இனாம் (ஒழிப்பு மற்றும் இரயத்துவாரியாக மாற்றல்) சட்டம் 1963 பிரிவு 8(2) (ii)ன் படி அருள்மிகு வேதாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் பட்டா பெற முழு தகுதியுடையவராகிறார் என சென்னை உதவி நிலவரித்திட்ட (வடக்கு) அலுவலரால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் வழிகாட்டுதல் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் நீண்ட கால சட்டப் பேராட்டங்களுக்கு பின்னர் இத்தீர்ப்பு திருக்கோயிலுக்கு சாதகமாக கிடைக்கப்பெற்றுள்ளது.

இத்தீர்ப்பின் அடிப்படையில் இந்நிலங்களுக்கு பட்டா பெற நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியருக்கு திருக்கோயில் செயல் அலுவலரால் விண்ணப்பிக்கப்பட்டு, தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு திருக்கோயிலுக்கு சொந்தமான 2122.10 ஏக்கர் நிலங்களுக்கு திருக்கோயில் பெயரிலேயே பட்டா பெறப்பட்டுள்ளது. மேலும், அருள்மிகு வேதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான இதர நிலங்களுக்கும் திருக்கோயில் பெயரிலேயே பட்டா பெறுவதற்கு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்தமாக, திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் எங்கிருந்தாலும் அவற்றை கண்டறிந்து அத்திருக்கோயிலுக்கு ஒப்படைக்கும் பணிகளில் இந்த அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் உறுதுணையாய் செயலாற்றும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 2122.10 ஏக்கர் நிலங்களுக்கு திருக்கோயில் பெயரில் பட்டா பெறப்பட்டுள்ளது: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: