வானூர் அருகே பட்டப்பகலில் பயங்கரம் புதுவை ரவுடிகள் 2 பேர் சரமாரி வெட்டி படுகொலை

 

வானூர், ஜூன் 11: புதுவையை சேர்ந்த 2 ரவுடிகளை பைக்கில் வந்த மர்ம நபர்கள் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி மாநிலம் பிள்ளையார்குப்பம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அருண்(34). ரவுடியான இவர் வில்லியனூர் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நடந்த இரட்டை கொலை வழக்கில் முதல் குற்றவாளி. இவரது கூட்டாளி வில்லியனூர் கோர்க்காடு பகுதியை சேர்ந்த அன்பரசன் (32). நண்பர்களான இருவரும் சமீப காலமாக ஒன்றாக சுற்றி வந்துள்ளனர். நேற்று காலை இருவரும் ஒரு பைக்கில் விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா திருவக்கரை பகுதி செங்கமேடு செல்லும் பாதையில் சென்றபோது, பின்தொடர்ந்து பைக்குகளில் வந்த 7 பேர் திடீரென இருவரையும் வழிமறித்தனர். மேலும், தாங்கள் கொண்டு வந்த அரிவாள்களால் கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரையும் வெட்டியுள்ளனர். அவர்களிடம் இருந்து அருண், அன்பரசன் தப்பியோட முயற்சி செய்தும், விடாமல் விரட்டி சென்று தலை மற்றும் கை பகுதியில் சரமாரியாக வெட்டியதில், சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் இறந்ததை உறுதி செய்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வானூர் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும், உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து விழுப்புரம் எஸ்பி சசான்சாய், கோட்டக்குப்பம் டிஎஸ்பி சுனில் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், புதுச்சேரியை சேர்ந்த ரவுடிகளான அருண் மற்றும் அன்பரசனை கடந்த சில தினங்களுக்கு முன்பு பயங்கர ஆய்தங்கள் வைத்திருந்த வழக்கில் மைலம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கின் பிணையில் வெளியே வந்துள்ள இருவரும் தினமும் மைலம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தனர்.

அதன்படி நேற்று மயிலம் காவல் நிலையத்துக்கு கையெழுத்திட இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது மர்ம கும்பல், இருவரையும் வழிமறித்து ஆயுதத்தால் தாக்கியது. இருவரும் சுதாரித்துக் கொண்டு தப்பித்து ஓடிய நிலையில் அந்த கும்பல் இருவரையும் ஒரு கிலோ மீட்டர் தூரம் விரட்டிசென்று ஓட, ஓட வெட்டி கொலை செய்தது தெரியவந்துள்ளது. இது குறித்து வானூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். அவர்கள் கைது செய்யப்படும் பட்சத்தில் கொலைக்கான காரணம் குறித்து தெரியவரும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் வானூர் மற்றும் புதுவை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post வானூர் அருகே பட்டப்பகலில் பயங்கரம் புதுவை ரவுடிகள் 2 பேர் சரமாரி வெட்டி படுகொலை appeared first on Dinakaran.

Related Stories: