திருப்புத்தூர் அருகே மஞ்சுவிரட்டில் 7 பேர் காயம்: 5 பேர் மீது வழக்குப்பதிவு

 

திருப்புத்தூர், ஜூன் 11: திருப்புத்தூர் அருகே மணக்குடி கிராமத்தில் ஆதீனமிளகி அய்யனார் கோயில் பால் சிறப்பு விழாவை முன்னிட்டு நேற்று நடந்த மஞ்சுவிரட்டில் 7 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதால் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்புத்தூர் அருகே மணக்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஆதீனமிளகி அய்யனார் கோயில் பால் சிறப்பை முன்னிட்டு நேற்று காலை மஞ்சுவிரட்டு நடந்தது.

இதில் திருப்புத்தூர், காரையூர், மாங்குடி, மணக்குடி, சோழம்பட்டி, கே.வைரவன்பட்டி, திருக்களாப்பட்டி, உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டு மாடுகள் மாலை, துண்டு, வேட்டி அணிவித்து அலங்கரிக்கப்பட்டு மணக்குடி பகுதியில் உள்ள வயல் பகுதிகளில் ஆங்காங்கே கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டது.

இதில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று மாடுகளை ஆர்வத்துடன் பிடித்தனர். இதில் மாடுகளை பிடிக்கும் போது 7 பேருக்கு லேசான சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து காரையூர் விஏஓ இந்துஜா கொடுத்த புகாரின் பேரில், மணக்குடியைச் சேர்ந்த மூர்த்தி(56), வைரவன்(58), சின்னக்கண்ணு(60), பெரிய கருப்பன்(60), வெள்ளை கண்ணு(58) ஆகிய 5 பேர் மீது அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக கண்டவராயன்பட்டி காவல் நிலைய சேதுராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post திருப்புத்தூர் அருகே மஞ்சுவிரட்டில் 7 பேர் காயம்: 5 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: