மானாமதுரையில் ஆண்கள் மட்டும் வழிபடும் திருவிழா

மானாமதுரை, ஜூன் 11: மானாமதுரையில் உள்ள சங்கு விநாயகர் கற்பூர சுந்தரசுவாமி கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கிடா வெட்டு திருவிழா நடைபெற்றது. மானாமதுரை அரசு மருத்துவமனையின் பின்புறம் உள்ளது சங்கு விநாயகர் கோயில். இக்கோயில் வளாகத்தில் கற்பூரசுந்தர சுவாமி, பொன்னர் சங்கர், அருக்காணி, முத்துராக்கு, அக்காண்டீஸ்வரி, கோட்டை முனீஸ்வரர் உள்ளிட்ட குலதெய்வங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் வைகாசி கடைசி செவ்வாய் கிழமையில் இந்த குலதெய்வங்களுக்கு களரி பூஜை நடக்கிறது. இந்தாண்டு களரி பூஜை கடந்த 7ம் தேதி காப்புக்கட்டுதலுடன் துவங்கியது.

விழாவின் 4ம் நாளான நேற்று முன்தினம் நேற்று முன்தினம் வைகை ஆற்றில் இருந்து கலசங்களில் எடுத்து வரப்பட்ட புனிதநீரால் தெய்வங்களுக்கு தீர்த்தவாரி நடந்தது. திருவிளக்கு பூஜைக்குபின் பூச்சொரிதல் விழாவும் தொடர்ந்து சன்னதிமுன் பூக்குழி இறங்குதலும் நடந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு கற்பூர சுந்தர சுவாமிக்கு நான்கு ஆடு, கோழிகளை வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். பலியிடப்பட்ட ஆடுகளுடன் 60 படி அரிசி சாதமும் சமைத்து படையலிடப்பட்டது.

படையல் போடும் முன் கோயிலுக்குள் உள்ள மற்ற தெய்வங்களின் சன்னதிகள் மூடப்பட்டன. இந்த பூஜையில் ஆண்கள் மட்டுமே கலந்துகொண்டனர். மறுநாளான நேற்று மதியம் காது குத்துதல், கிடாவெட்டுதல், மாவிளக்கு நேர்த்திக்கடன் செலுத்துதல் உள்ளிட்ட களரி பூஜைகள் நடந்தன. விழாவில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

The post மானாமதுரையில் ஆண்கள் மட்டும் வழிபடும் திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: