சிவப்பு கம்பள மரியாதையுடன் ஓய்வு நீதிபதியின் காரை தள்ளி சென்று நீதிபதிகள் பிரியாவிடை: ஐகோர்ட் கிளையில் நெகிழ்ச்சி

மதுரை: ஓய்வு நீதிபதியின் காரை தள்ளிச் சென்று சக நீதிபதிகள் பிரியாவிடை கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம், பரமன்குறிச்சியைச் ேசர்ந்தவர் ஆர்.தாரணி. கடந்த 1991ல் செங்கல்பட்டில் மாஜிஸ்திரேட்டாக தனது நீதித்துறை பணியை துவக்கியவர், கடந்த 2017ல் மதுரை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியாக பணியாற்றினார். அப்போது சென்னை ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதியாக பணியாற்றியவர் நேற்று பணி ஓய்வு பெற்றார்.

இதையடுத்து அவரை வழியனுப்பும் நிகழ்ச்சி நேற்று மாலை ஐகோர்ட் கிளையில் நடந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்தவாறு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா உள்ளிட்ட நீதிபதிகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வாழ்த்து தெரிவித்தனர். ஐகோர்ட் மதுரை கிளையில் ஆர்.சுரேஷ்குமார் உள்ளிட்ட நீதிபதிகள், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் வீராகதிரவன், பாஸ்கரன், அரசு பிளீடர் திலக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஓய்வு நீதிபதி தாரணி பேசுகையில், ‘‘இந்திய தண்டனைச் சட்டம், சாட்சிய சட்டம், சுற்றுச்சூழல், சாலை விதிகள் உள்ளிட்ட அடிப்படை சட்டம் மற்றும் விதிகள் குறித்து பள்ளி புத்தகங்களில் பாடமாக்க வேண்டும்.

வங்கி நடைமுறைகளில் தற்போதைய சூழலுக்கு ஏற்ப மாற்றங்கள் கொண்டு வர வேண்டும்’’ என்றார். இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி தாரணியை, சக நீதிபதிகள் வழியனுப்பி வைத்தனர். தாரணி சென்ற காரை நீதிபதிகள் சுரேஷ்குமார், சரவணன், இளந்திரையன், இளங்கோவன், சதீஷ்குமார் உள்ளிட்டோர் சுமார் 100 அடி தூரத்திற்கு தள்ளிச் சென்றவாறு வழியனுப்பினர்.இதையடுத்து சிவப்பு கம்பள விரிப்பில் மத்திய தொழில்பாதுகாப்பு படையினரின் அணிவகுப்புடன் தாரணி விடை பெற்றார்.
பணி ஓய்வு பெற்ற நீதிபதியின் காரை தள்ளி சென்று சகநீதிபதிகள் வழியனுப்பியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

The post சிவப்பு கம்பள மரியாதையுடன் ஓய்வு நீதிபதியின் காரை தள்ளி சென்று நீதிபதிகள் பிரியாவிடை: ஐகோர்ட் கிளையில் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: