ஒட்டன்சத்திரம், ஜூன் 10: ஒட்டன்சத்திரம் அருகே சத்திரப்பட்டி வேலூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ உச்சி மகா காளியம்மன்,ஸ்ரீ முத்தாலம்மன், ஸ்ரீ கருப்பண சாமி ஆகிய கோயில்களுக்கு மகா கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி கடந்த 3 நாட்களாக மூன்று கால யாக பூஜைகள் நடந்து வந்தன. 4வது நாளான நேற்று காலை நான்காம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து தீர்த்த கலசங்கள் கோயில் கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது.
பின்னர் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். கூனம்பட்டி திருமடம் சிவாகம பாஸ்கர கயிலை மணி சிவ ஸ்ரீ கிரிவாசகசிவம் தலைமையில் 20க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை நடத்தினர். இதில் 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். காலை முதல் மாலை வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
The post ஒட்டன்சத்திரம் வேலூரில் உச்சி மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர் appeared first on Dinakaran.