பிரெஞ்ச் ஓபன் பைனலில் இகா – முகோவா மோதல்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் நடப்பு சாம்பியன் இகா ஸ்வியாடெக் – கரோலினா முகோவா மோதுகின்றனர். நம்பர் 1 வீராங்கனை மற்றும் நடப்பு சாம்பியனான இகா ஸ்வியாடெக் (22 வயது,போலந்து) 2020, 2022ல் பிரெஞ்ச் ஓபன் கோப்பையை வென்றுள்ளார். 2022 ஏப்ரலில், தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறிய பிறகு தொடர்ந்து நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இடையில் யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் வென்றார். மேலும், கிராண்ட் ஸ்லாம் தொடரின் பைனலுக்கு முன்னேறிய 3 முறையும் பட்டம் வென்றுள்ளது இகாவுக்கு சாதகமான அம்சம்.

அதே சமயம், பிரெஞ்ச் ஓபனில் 2008ல் இருந்து நடப்பு சாம்பியன்கள் யாரும் கோப்பையை தக்கவைத்தது இல்லை. அதற்கு ஸ்வியாடெக்கும் விலக்கல்ல. 2020ல் சாம்பியன் பட்டம் வென்ற அவர் 2021ல் காலிறுதியை தாண்டவில்லை. அதை மாற்றி இகா இந்த முறை வரலாறு படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவரை எதிர்த்து களமிறங்கும் கரோலினா முகோவா (26 வயது, 43வது ரேங்க்) தரவரிசையில் பின்தங்கியிருந்தாலும், நடப்பு தொடரில் முன்னணி வீராங்கனைகள் அரினா சபலென்கா (2வது ரேங்க்), மரியா சாக்கரியை (8வது ரேங்க்) வீழ்த்தியதால் மிகுந்த உற்சாத்துடன் பைனலில் களமிறங்குகிறார்.

அவர் முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் பைனலில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் 2019 பிரேகு ஓபன் முதல் சுற்றில் இருவரும் மோதியதில் முகோவ 4-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்றுள்ளார். கோப்பையை தக்கவைக்க ஸ்வியாடெக்கும், முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்ல முகோவாவும் வரிந்துகட்டுவதால் இன்றைய பைனலில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

The post பிரெஞ்ச் ஓபன் பைனலில் இகா – முகோவா மோதல் appeared first on Dinakaran.

Related Stories: