தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட வேளாண் பயிர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். சேத விவரங்களை மதிப்பீடு செய்து அதிகாரிகள் அறிக்கை தரும் வரை தாமதிக்காமல் நிவாரணம் தரவும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; “தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வேளாண் பயிர்கள் முற்றிலும் சேதம் அடைந்து விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சூறைகாற்றுடன் கூடிய கனமழையால் வாழை, சோளம், முருங்கை, தென்னை, பப்பாளி ஆகிய பயிர்கள் முற்றிலும் சேதம் அடைந்த நிலையில் விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அதில் இருந்து தற்போதுதான் மீண்டு வந்து மீண்டும் கடன் வாங்கி கோடைகால பயிர் செய்த நிலையில் சூறாவளி காற்றில் அவையும் சேதம் அடைந்ததால் பெரும் வேதனையில் தவிக்கின்றனர்.

எனவே, தமிழ்நாடு முழுவதும் வேளாண்துறை அதிகாரிகள் சேத விவரங்களை மதிப்பீடு செய்து பாதிப்புகள் குறித்த விவரங்களைத் தாக்கல் செய்யும் வரை காத்திருக்காமல், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடைக்கால நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

The post தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட வேளாண் பயிர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: