திருவாரூர் அருகே நாகை நகராட்சிக்கு குடிநீர் விநியோகிக்க எதிர்ப்பு

திருவாரூர், ஜூன் 9: திருவாரூர் அருகே வேறு நகராட்சிக்கு குடிநீர் விநியோகிக்க எதிர்ப்பு தெரிவி்த்து, குழாய் அமைக்கும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் அடுத்த கள்ளிக்குடி ஊராட்சியில் தென் ஓடாச்சேரி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து நாகப்பட்டினம் நகராட்சிக்கு கடந்த 1896ம் ஆண்டு முதல் 3 ஆழ்துளை கிணறுகள் போடப்பட்டு குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த குடிநீரானது, நாகப்பட்டினம் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தென்ஓடாச்சேரியில் உள்ள ஆழ்துளை கிணறுகள் சீரமைப்பு மற்றும் ராட்சத குழாய் அமைக்கும் பணிகள் கடந்த ஒரு சில நாட்களாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று மதியம் தொடங்கி பணிகள் நடைபெற்று வந்த நிலையில் 15-க்கும் மேற்பட்ட தென் ஓடாச்சேரியை சேர்ந்தவர்கள் பணிகள் நடைபெறக் கூடாது எனவும், தென்ஓடாச்சேரி கிராமத்தில் 25 அடியில் குடிநீர் கிடைத்து வந்த நிலையில் ராட்சத போர்கள் அமைக்கப்பட்டு நாகப்பட்டினத்திற்கு தண்ணீர் கொண்டு சென்றதன் காரணமாக 200 அடிக்கு நிலத்தடி நீர்மட்டம் இறங்கிவிட்டது.

இதே நிலை நீடித்தால் தென் ஓடாச்சேரி கிராமத்திலும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என கூறி பணி செய்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பணி செய்து வந்த ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணிகளை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த வைப்பூர் காவல்துறையினர் பணிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்த பின்னர் பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் தென் ஓடாச்சேரி கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post திருவாரூர் அருகே நாகை நகராட்சிக்கு குடிநீர் விநியோகிக்க எதிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: