கிருஷ்ணராயபுரம், ஜூன் 9: மாயனூர் காவிரி கதவணை புனரமைக்கும் பணிகள் நிறைவடைந்து மேட்டூர் அணையிலிருந்து வரும் காவிரித்தாயை வரவேற்க தயார் நிலையில் உள்ளது. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் காவிரி கதவனை ரூ.185 கோடி மதிப்பிலான புனரமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீர் கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் காவிரி கதவணையில் 1.05 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. அணையில் இருந்து 98 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டு காவிரி மற்றும் கொள்ளிடம் மூலமாக திருச்சி முக்கொம்பூர், கல்லணை சென்றடைகிறது.
அங்கிருந்து தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் போன்ற டெல்டா மாவட்டங்களுக்கு சென்றடைந்து பின்பு பூம்புகாரில் கடலில் தண்ணீர் கலக்கின்றது. மேலும், மாயனூர் காவிரி கதவணையில் இருந்து 4 பாசன வாய்க்கால் மூலமாக திறந்து விடும் கண்ணீர் ஆனது பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களுக்கு பாய்வதால் இதன் மூலம் நெல், வாழை, கரும்பு, வெற்றிலை கொடிக்கால் போன்ற விவசாயங்கள் செழிப்பாக நடைபெற்று வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் ஜூன் மாதத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டு, ஜனவரி மாதம் தண்ணீர் அடைப்பது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாயனூர் காவிரி கதவணையின் 98 மதகுகள் வலுப்படுத்தும் வகையில் புரன்னமைக்கும் பணி ரூ.185 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் மாயனூர் கதவணையில் புனரமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
பிறகு மீண்டும் இந்தாண்டு கடந்த ஜனவரி மாதம் காவிரியில் தண்ணீர் அடைக்கப்பட்டதால் புனரமைக்கும் பணி மீண்டும் தொடங்கி நடைபெற்று வந்தது. இதன் பணிகள் 100 சதவீதம் நிறைவடையும் தருவாயில் உள்ளதால் இந்த மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு தயாரான நிலையில் உள்ளது.
The post காவிரித்தாயை வரவேற்க மாயனூர் தயார் appeared first on Dinakaran.