பஞ்சாயத்து சட்டப்படி மயானம் என அறிவிக்கப்படாத இடத்தில் சடலங்களை அடக்கம் செய்யலாமா?…வழக்கை முழு அமர்வில் விசாரிப்பதாக உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவொற்றியூர்: தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தின்படி, மயானம் என்று அறிவிக்கப்பட்ட பகுதி இருந்த போதும் மயானமாக அறிவிக்கப்படாத பகுதியில் சடலங்களை அடக்கம் செய்யலாமா என்பது குறித்த வழக்கை முழு அமர்வுக்கு மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், நொச்சிலி கிராமத்தை சேர்ந்த பாபு நாயுடு என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தங்களது கிராமத்தில் இறந்தவர்களின் உடலை புதைப்பதற்காக தனியாக மயானம் உள்ள நிலையில், ஜெகதீஷ்வரி என்பவர் உயிரிழந்த அவரது கணவரின் உடலை சட்ட விரோதமாக பட்டா நிலத்தில் புதைத்துள்ளார்.

புதைக்கப்பட்ட அந்த உடலை தோண்டி எடுத்து மயானத்திலேயே புதைக்க கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, பஞ்சாயத்து சட்டப்படி, பட்டா நிலத்தில் உடலை புதைக்க முடியாது எனக் கூறி உடலை தோண்டி எடுத்து மயானத்தில் அடக்கம் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஜெகதீஷ்வரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மயானமாக அறிவிக்கப்படாத இடங்களில் சடலங்களை புதைக்க தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து சட்ட விதிகளில் எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்று வாதிட்டார்.

அப்போது பாபு நாயுடு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே சடலங்களை புதைக்க வேண்டும் என விதிகளில் கூறப்பட்டுள்ளது என்றார். இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், கிராமத்தில் மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதி இருந்த போதும், கிராம பஞ்சாயத்து சட்ட விதிகளின் கீழ் மயானமாக அறிவிக்கப்படாத பகுதியில் சடலங்களை புதைக்கலாமா என்பது குறித்து ஆய்வு செய்ய இந்த வழக்கு முழு அமர்வுக்கு மாற்றப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

The post பஞ்சாயத்து சட்டப்படி மயானம் என அறிவிக்கப்படாத இடத்தில் சடலங்களை அடக்கம் செய்யலாமா?…வழக்கை முழு அமர்வில் விசாரிப்பதாக உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: