சென்னை கடற்கரை -எழும்பூர் இடையேயான 4வது ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில் திடீர் மாற்றம்: பயணிகளுக்கு பாதிப்பு இல்லாமல் அமைக்க முடிவு

* சிறப்பு செய்தி
எழும்பூர்-கடற்கரை இடையே 4வது ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை மாற்றி அமைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இயக்கப்படும் ரயில்களை நிறுத்தாமல் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் புதிய ரயில் பாதையை அமைக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. வடமாநிலங்களுக்குச் செல்லும் ரயில்கள் பெரும்பாலும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படுவதால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது. இங்கு பயணிகள் கூட்டத்தை குறைக்கும் நோக்கில், தாம்பரத்தில் இருந்து எழும்பூர் ரயில் நிலையம் வழியாக வட மாநிலங்களுக்கு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் தடையின்றி இயங்க சென்னை கடற்கரை -எழும்பூர் இடையே 4வது ரயில் பாதை அமைக்கக் வேண்டி உள்ளது.

இதனால், சென்னை கடற்கரை -எழும்பூர் இடையே 4.3 கி.மீ. தொலைவுக்கு 4வது புதிய ரயில் பாதை அமைக்க ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்தது. மேலும், ரூ.300 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரித்து புதிய பாதைக்கு மண் பரிசோதனை முடிக்கப்பட்டு, கடந்த 2 ஆண்டுக்கு முன்பு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு ரயில்வே வாரியமும் ஒப்புதல் அளித்தது. இருப்பினும், நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் காரணமாக, பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இதனிடையே, சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4வது பாதை அமைக்கும் திட்டத்துக்கு ஒன்றிய பட்ஜெட்டில் ரூ.96.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த 4வது வழித்தட பணிகளுக்காக, சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதாவது, சென்னை கடற்கரை – சேப்பாக்கம் இடையே பறக்கும் ரயில் சேவை வரும் ஜூலை 1ம் தேதி முதல் 2024 ஜன.31ம் தேதி வரை 7 மாதங்களுக்கு ரத்து செய்யப்படுவதாகவும், சேப்பாக்கத்தில் இருந்து வேளச்சேரி வரை ரயில்கள் இயக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.

இதற்கு பயணிகள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியதால் இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வந்தனர். இதையடுத்து வரும் ஜூலை 1ம் தேதி முதல் பறக்கும் ரயில் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், எழும்பூர்-சென்னை கடற்கரை வரையிலான 4வது ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை மாற்றி அமைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் 4வது ரயில் பாதை அமைக்கப்படும் என்று தெரிகிறது.

The post சென்னை கடற்கரை -எழும்பூர் இடையேயான 4வது ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில் திடீர் மாற்றம்: பயணிகளுக்கு பாதிப்பு இல்லாமல் அமைக்க முடிவு appeared first on Dinakaran.

Related Stories: