பாபநாசம் அருகே மரக்கிளை முறிந்து விழுந்தது மின்வாரிய ஊழியர்கள் இருவர் படுகாயம்

தஞ்சாவூர், ஜூன் 8: பாபநாசம் அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரத்தில் இருந்து கிளை முறிந்து விழுந்தது. அந்த நேரத்தில் மின் சீரமைப்பு பணியில் இருந்த மின்வாரிய ஊழியர்கள் இருவர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வங்காரம்பேட்டையில் அமைந்துள்ள, தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையான சுண்ணாம்பு காலவாய் பகுதியில், சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த தூங்கு மூஞ்சி மரம் உள்ளது. சூறாவளி காற்றுடன் பெய்த மழையின் காரணமாக பழுதடைந்த மின் கம்பிகளை சரி செய்வதற்காக, இந்த மரத்தின் அருகே அமைந்துள்ள மின்சார கம்பத்தில் மின் ஊழியர்கள் தங்களது பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

அப்போது யாரும் எதிர்பாராத வகையில் திடீரென பழமை வாய்ந்த அந்த மரத்தின் கிளை முறிந்து விழுந்தது. அப்போது மின் சீரமைப்பு பணியில் இருந்த ஊழியர்களான நீலமேகம் மற்றும் மாரியப்பன் பலத்த காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மரத்திற்கு அருகே குடியிருந்த விஜயா குடும்பத்தினரின் வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்தது. மேலும் படுகாயம் அடைந்த மின் ஊழியர்களை மின்சார வாரிய அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டனர்.

The post பாபநாசம் அருகே மரக்கிளை முறிந்து விழுந்தது மின்வாரிய ஊழியர்கள் இருவர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: