தாதா அன்சாரி கூட்டாளி கோர்ட்டில் சுட்டுக்கொலை

லக்னோ: உபி தாதா முக்தர் அன்சாரி கூட்டாளி சஞ்சீவ் மகேஸ்வரி ஜீவா நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். உபி காங்கிரஸ் மூத்த தலைவரான அவதேஷ் ராய் கடந்த 1991ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் மே 19ம் தேதி விசாரணை முடிந்த நிலையில், பிரபல தாதா முக்தார் அன்சாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், முக்தார் அன்சாரியின் நெருங்கிய உதவியாளரான முசாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்த சஞ்சீவ் மகேஸ்வரி ஜீவா(42) லக்னோ கோர்ட் வளாகத்தில் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

லக்னோ சிறையில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜீவா மீது வழக்கறிஞர்கள் போல் வேடமணிந்து வந்த நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கி சூடு நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த தாக்குதலில் 2 வயது சிறுமி, ஒரு போலீஸ்காரர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர். இதில் சிறுமி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. கொல்லப்பட்ட ஜீவா, இதற்கு முன்பு பா.ஜ. எம்எல்ஏ கிருஷ்ணானந்த் ராய், மாநில அமைச்சராக இருந்த பிரம்மதத்தா திவேதி ஆகியோரின் கொலைகள் உள்பட 24 வழக்குகளில் சிக்கியுள்ளார்.

The post தாதா அன்சாரி கூட்டாளி கோர்ட்டில் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Related Stories: