தஞ்சாவூர் பூச்சந்தை அருகே உடைப்பெடுத்த பாதாள சாக்கடையால் துர்நாற்றம்

 

தஞ்சாவூர், ஜூன் 7: தஞ்சாவூர் பூச்சந்தை அருகே சாலையில் உடைப்பெடுத்த பாதாள சாக்கடையால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். தஞ்சாவூர் பூச்சந்தை பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சாலையில் உள்ள பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் கழிவுநீர் கடும் துர்நாற்றத்துடன் சாலையில் வெள்ளம் போல் ஓடுகிறது. அச்சாலை சுற்றுச்சாலை வரை செல்லும் பகுதி என்பதால் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி காணப்படும். மேலும் பூச்சந்தை பகுதியில் ஏராளமான பூக்கடைகள், இறைச்சிக் கடைகள் என பல்வேறு வியாபார கடைகள் உள்ளது.

இங்கு பொருட்கள் வாங்க தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சாலையில் ஓடும் கழிவு நீரிலேயே பொதுமக்கள் நடந்து சென்று பொருட்களை வாங்கும் அவல நிலைக்கு ஆளாகியுள்ளனர். அத்துடன் கடும் துர்நாற்றம் வீசுவதால் கடும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அச்சாலையில் செல்லும் வாகனங்கள் கழிவு நீர் மேலே செல்லும் போது அருகில் நடந்து செல்வோர் மீது கழிவு நீர் தெறித்து கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.

மாலை மற்றும் இரவு நேரங்களில் அப்பகுதியில் உள்ள சாலையோர பள்ளங்களில் கழிவு நீர் தேங்கி கொசு உற்பத்தியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதற்கு முன்பு பாதாள சாக்கடை உடைப்பை சரி செய்து கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி பூக்கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மாநகராட்சி சுகாதார அலுவலர்களை வலியுறுத்தி உள்ளனர்.

The post தஞ்சாவூர் பூச்சந்தை அருகே உடைப்பெடுத்த பாதாள சாக்கடையால் துர்நாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: